1/3/13

தலைவா, வா! - புத்தக விமர்சனம்!

3 கருத்துரைகள்



ஒரு முக்கியமான புத்தகம் வாங்கச் சென்ற போது கண்ணில் பட்டது இந்த புத்தகம். தீர்ந்து போயிருந்த புத்தகங்களின் மிச்சமாய் ஒரே…ஒரு…புத்தகம் மட்டுமே இருந்தது. சில பக்கங்களில் சரியாக எழுத்துகள் அச்சாகவில்லை. "வேற புக் இல்லைங்களா?" என்றேன் "இல்லை இது ஒண்ணுதாங்க இருக்கு!" என்றார் புத்தக கடைக்காரர். சரி படிப்போம் என்று வாங்கி வந்துவிட்டேன்.

"பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்து முடித்துதான் எழுவீர்கள்." என்று பின்னட்டையில் எழுதியிருந்தார்கள். நான் படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது அது உண்மை என்று.

பெரும்பாலான தன்னம்பிக்கை இதழ்களில், ஒரு அறிவுரையாக, ஒரு கட்டுரையாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றமடைந்த பல தொழில் அதிபர்களைப் பற்றி, அவர்களின் வெற்றி தந்த சூத்திரங்களை அலசி ஆராய்ந்து மேற்கோள் காட்டி எழுதியிருப்பார்கள். அது போன்ற புத்தகங்களை தினமும் ஒரு பகுதி என்கின்ற ரீதியில்தான் நான் படிப்பேன். ஆனால் உண்மையில் முழு மூச்சாக படித்து முடிக்கக் காரணம் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு கதை போல கொண்டு போயிருக்கின்றார்.

அது மட்டுமில்லாது இப்பொழுது திருப்பூரில் தொழிலில் இருக்கும் பொருளாதார மந்த நிலையின் காரணமாகவும், சில தவறுகளினாலும் எனது வண்டி கொஞ்சம் சிரமமான நிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

விக்னேஷ் என்பவர் ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி. சென்ற வருடத்தில் இருந்ததை விட இவரின் குழு விற்பனையில் மந்தநிலை எட்டவே, என்ன தவறு செய்தோம் என்பதை கண்டுபிடிக்க இயலாமல் இருக்கும் நிலையில், ஒரு நண்பரின் மூலம் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கும் "சந்திரமௌலி" என்பவரிடம் சென்று ஆலோசனை பெறுகின்றார், "குருப்பயிற்சி" என்று அவரிடம் வாரம் ஒரு முறை சென்று அவரின் ஆலோசனையின் படி ஒவ்வொரு செயலையும் மாற்றம் செய்து தம்மை மேம்படுத்திக் கொள்கின்றார், தன்னுடைய செயல்களையும் மாற்றிக் கொள்கின்றான். அதில் முக்கியமானது அடுத்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் மற்றும் ஒருவரின் செயல்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும் என்பதை முக்கியமாக மாற்றிக் கொள்கின்றார். முன்னால் சிடுசிடுவேன்று தனக்கு கீழ் உள்ளவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்த வின்னேஷ், நண்பனைப் போல் அனைவரிடமும் பழகுகின்றான். இன்னும் பல ஆலோசனைகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றி பெறுகின்றான்.

இதை கதை போல, ஒரு நாவல் போல விறுவிறுப்பாக எழுதியிருக்கின்றார் நூலாசிரியர் சுரேகா. புதிய தொழில் தொடங்குவோர், செய்யும் தொழிலில் மந்த நிலையில் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஆகச்சிறந்த ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விக்னேஷ்க்கு ஒரு சந்திரமௌலி கிடைத்தது போல நமக்கும் சுரேகா அவர்களின் புத்தகம் வழி நடத்திச் செல்லும் என நம்புகின்றேன்! ஒரு சில எழுத்துப் பிழைகள் உள்ளது மட்டுமே, இந்த புத்தகத்தின் சிறு குறை எனலாம்! வலைப்பதிவில் எழுதுவது என்பது வேறு நாம் மட்டும்தான் படிக்க போகின்றோம், எழுதுவதும், திருத்துவதும் நாம்தான் அதனால் எதிர்பாராமல் ஏற்படும். ஆனால் புத்தகம் அப்படியல்ல, பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், படிக்கக் கூடும் அதனால் கூடுமான வரை பதிவர்கள் தங்கள் புத்தகங்களில் எழுத்துப் பிழை தவிர்க்கவும்.

பிரசுரம் : மதி நிலையம்
ஆன்லைனில் வாங்க : Discovery Book Place
மேலும் வாசிக்க
 

மேலே செல்