2/1/13

மறக்க முடியாத தமிழாசிரியர்கள் - கவிப்ரியன்

2 கருத்துரைகள்


தமிழாசிரியர்களுக்கென்றே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பது இவர்களுக்கு முழுக்கப் பொருந்தும். தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டபின்தான் மற்ற பாடங்களையே படிக்க ஆரம்பிக்கிறோம். 

நாம் பிறந்தது முதல் உணர்ந்து, கேட்டு, பேசி வந்தாலும் ஒரு மொழியை முற்றிலுமாக கற்பது என்பது வாசித்தலையும், பிழையற எழுதுவதையும் உள்ளடக்கியது. இதற்கான முதல் வித்து ஊன்றப்படுவது தமிழாசிரியர்களால்தான்.


                 
ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நான் பயின்ற நாட்கள் பெரும்பாலும் நினைவில்லை என்றுதான் சொல்லவேண்டும். புளிய மரத்தடியில் எங்களை உட்காரவைத்து எங்களுக்கு வகுப்பெடுத்த  'மனோன்மணி' ஆசிரியையை நன்றாக நினைவிருக்கிறது. மதிய உணவுத் திட்டத்தில், மூன்று சக்கர வண்டியில் கருப்பு பிளாஸ்டிக் டப்பாக்களில் கோதுமையால் செய்த ஒரு வகை உணவை அடைத்து எங்கிருந்தோ சுடச்சுட கொண்டு வருவார்கள். 

எல்லோருக்கும் கிடைக்கும்தான் என்றாலும் வரிசையில் உட்காருவதற்கே சிறுவர்களுக்கேயான ஒரு தள்ளுமுள்ளு போட்டி இருக்கும். அப்போது வரிசையில் உட்காரவில்லை என்பதற்காக 'பீதாம்பரம்' என்ற எனது தலைமை ஆசிரியர் என்னை குனியவைத்து முதுகில் அடித்ததை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் யார் என்று எவ்வளவு முயற்சி செய்தும் நினைவுக்கு வரவில்லை.


ஆரம்பப் பள்ளியிலிருந்து 5-ம் வகுப்பு முடித்து 6 வது படிக்க, எங்கள் ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து எனக்கு வகுப்பெடுத்த அத்தனை ஆசிரியர்களையும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 

அங்கும் கூட மனோன்மணி என்ற பெயருடைய ஆசிரியையே தமிழாசிரியராகவும் வகுப்பாசிரியராகவும் இருந்தார். ஏழாம் வகுப்பு போனபோது திருமதி. மனோன்மணி ஆசிரியரின் கணவர் திரு.ஜி. நாராயணசாமி ஜயா அவர்கள் தமிழாசிரியராக இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்த காரணத்தால் மனோன்மணி ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுத்தபடியால் சுலபமாக அவரது கணவரான நாராயணசாமி ஜயா அவர்களிடமும் நல்ல பெயர் வாங்க முடிந்தது.

ஆனால் எட்டாம் வகுப்பில் திரு. தங்கராசு ஜயா தமிழாசிரியராக வந்த பின்பு தமிழாசிரியர் என்றால் மென்மையானவர்கள் மட்டுமில்லை இவரைப்போல கண்டிப்பானவர்களும் உண்டு என்பதை அறிந்துகொண்டேன். நல்ல மாணவர்களிடத்தில் அன்பும், சரியில்லாத மாணவர்களிடத்தில் கண்டிப்பும் என்பதே அவரது பாணி. பெரும்பாலும் அவரிடம் அடி வாங்காதவர்களே கிடையாது. அதிலும் காதில் கிள்ள ஆரம்பித்தால் அது ஜென்மத்துக்கும் மறக்காது. அத்தனை கண்டிப்பானவர்.

ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது திரு. அமரன் ஐயா அவர்கள் தமிழாசிரியர். அவரது கையெழுத்து அச்சில் வார்த்தது போல இருக்கும். பள்ளியில் இலக்கியப் போட்டிகள் எது நடந்தாலும் அது கட்டுரைப் போட்டியோ, கையெழுத்துப் போட்டியோ அல்லது ஓவியப் போட்டியோ எது நடந்தாலும் என்னைக் கேட்காமலேயே என் பெயரைச் சோர்த்துவிடுவார். இதிலிருந்து பின்வாங்கவே முடியாது. எப்படியோ மன்றாடி பேச்சுப் போட்டியிலிருந்து தப்பித்துவிடுவேன். அப்போது அவர் தந்த ஊக்கம்தான் 

இப்போது இந்த அளவுக்காவது என்னால் எழுதமுடிகிறது. கட்டுரைப்போட்டி எந்த தலைப்பில் எப்போது கொடுத்தாலும் அதில் நான் கலந்து கொண்டால் முதல் பரிசு எனக்குத்தான். இந்த தன்னம்பிக்கை பிற்காலத்தில் ஒரு பிரபல வார இதழ் ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்தபோது நண்பர்களிடம் சவால் விட்டு அந்தக்கட்டுரைப்பொட்டியில் ஜெயித்தும் காட்டினேன். என் அழகான கையெழுத்துக்கும் காரணம் அவரே!


பின்னாளில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள் என என் பன்முகத்தன்மை வெளிப்பட அவரே காரணமானவர். அடுத்து பத்தாம் வகுப்பிலும், மேல்நிலைக்கல்வி பயிலும் போதும் எனக்கு தமிழாசிரியர் திரு. சைலவாசன் ஐயா அவர்கள்.

எந்தப் பேச்சுப்போட்டியிலும் பங்கெடுக்காத நான் இவரின் இவரின் வகுப்பெடுக்கும் அழகால், பேச்சாற்றலால் மிகவும் கவரப்பட்டேன். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளரும் கூட. ஏன் பட்டிமன்றம் என்றால் என்ன என்பதையே இவரால்தான் நான் அறிந்துகொண்டேன். இவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் என்றால் அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நண்பர்களுடன் சைக்கிளில் கிளம்பிவிடுவேன்.
                                 
நாளடைவில் எங்களூரில் நடைபெற்ற ஒரு விழாவில் இவரின் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்ய அவர் வீடு தேடிச்சென்று ஒப்புதல் வாங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்தபின் அவரால் அதில் கலந்துகொள்ளாமல் போனது எங்கள் துரதிஷடமே!

பின்னர் இவர் எங்களூரிலிருந்து மாற்றலாகி வேலூருக்கு அருகில் உள்ள ‘பள்ளிகொண்டாவிற்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று சென்றதாக அறிந்தேன். எட்டாம் வகுப்பிலேயே மாற்றலாகிப்போன தங்கராசு ஐயா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அமரன் ஐயாவும் வேலூரில் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். 

இதில் திரு. நாராயணசாமி ஐயா கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆசிரியை அவர்களை எப்போதாவது சென்று பார்ப்பது உண்டு. என் இந்த ஓரளவு தமிழறிவுக்கு காரணமான இந்த தமிழாசிரியர்கள் எப்போதுமே என்னால் மறக்க முடிந்ததில்லை.

இது தவிர நூலகங்கள் எனது தமிழை மேம்படுத்த மிகவும் உறுதுணையாய் இருந்திருக்கின்றன. வேலூர் தலைமை நூலகத்தில் உறுப்பினராகி காலை முதல் மாலை வரை சாப்பிடக்கூடச் செல்லாமல் அங்கேயே கிடந்த நாட்கள் அதிகம். வீட்டிற்கு எடுத்துச்செல்லும் புத்தகங்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாமல் அபராதம் கட்டியதும் அதிகம். 

இப்படி நூலக வாசிப்புக்கு அடிகோலியது நான் படித்த பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப்பள்ளியே மிக முக்கிய காரணமாகும். பின்னாளில் நான் பயணம் போகும் இடமெல்லாம் நூலகம் எங்கே என்று தேடியலைந்து உறுப்பினரானது வேறு விஷயம்.

இப்படி புத்தக வாசிப்பிற்கு அடிமையாகிப் போனதற்கு எனது இளம் பிராயத்து கதைப்புத்தக வாசிப்பின் ஆர்வம் கூட காரணமாக இருந்திருக்கலாம். எனது பெரியப்பா வீடுகளில் அவர்கள் வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படியாவது கெஞ்சிக்கேட்டு வாங்கிவந்து படிப்பது எனது வாடிக்கையான வழக்கம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கலைஞரின் ‘புதையல் என்கிற மிகப்பெரிய நாவலை வாசித்திருக்கிறேன். அப்புறம் குமுதம், கல்கி,  ராணி போன்ற இதழ்களும் சிறுவயதிலேயே வாசிக்கத்தொடங்கியிருந்தேன். தமிழ்வாணனின் பல புத்தகங்களும், டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின் போன்றவர்களின் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.

அந்த பழக்கங்கள்தான் என் இன்றைய இணைய வாசிப்பிற்கும் ஊன்றுகோலாயிருந்து பதிவு உலகம் வரை என்னை அழைத்து வந்திருக்கிறது. இவைகள் எல்லாம் என் நினைவில் இருந்தாலும் எழுத்திலே நினைவு கூற வைத்த 'தமிழ்ச்செடி'க்கு எனது மனமார்ந்த நன்றி! ! 

திரு. கவிபிரியனின் வலைதளம் 

மேலும் வாசிக்க

1/27/13

டாலர் நகர் புத்தக வெளியீட்டு விழா - நேரலை காணொளி

4 கருத்துரைகள்
இன்று ( ஜனவரி 27, 2013. ஞாயிறு ) திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள டி.ஆர்.ஜி. ஹோட்டல் அரங்கத்தில்

ஜோதிஜியின் "டாலர் நகரம்" புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நமது தமிழ்செடியில் காணொளி மூலம் காண..


Watch live streaming video from tamil24news at livestream.com

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் நமது சக பதிவருக்கு பகிருங்கள்...

மேலும் வாசிக்க

1/21/13

பாத்துமாவின்ட ஆடு - சில குறிப்புகள்!

0 கருத்துரைகள்


மலைச் சாரலைப் போல், அமைதியான அலைகடலைப் போல், ஆர்ப்பாட்டமில்லாத, ஆரவாரமில்லாத, அமைதியான, தென்றலைப் போல் மயிலிறகில் நம்மை வருடும் விதமான எழுத்தைப் படைப்பதில் மலையாள இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்.

நாம் பிரமிக்கும் தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர். மற்றும் எழுத்தாளர்களின் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் தமிழில் பஷீருடன் ஒப்பிட்டுப் பேச நம்  மொழியில் எவரும் இல்லை. அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிசச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். என்கின்றார்.

1908ம் வருடம் கேரளாவில் வைக்கம் தாலுக்காவில் தலயோலப் பிரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராகச் சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழான உஜ்ஜீவனம் எனும் வார இதழையும் துவக்கினார்.

பத்தாண்டுகள் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலக்கட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஜந்தாறு வருடங்கள் இமயமலைச்சாரலிலும்,கங்கை கரையிலும் இந்து துறவியாகவும், இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய அரசுகளின் ஓய்வூதியம், ஃபெல்லோஷிப், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர். 1994ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி காலமானார்.

இவருடைய நாவலான “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது” என்கின்ற நாவலை மார்க்கிசிய கருத்தியலுக்கு எதிரான பிற்போக்கு நாவலென்று கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. எதிர்த்தவர்களில் முக்கியமானவர் அன்றைய கேரள நிதிமந்திரியாக இருந்த அச்சுமோனோன் என்பவர்.

ஆனால் அந்த நாவல் மத்திய சாகித்ய அகாதாமியால் தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

பிறகு சில வருடங்களுக்கு பிறகு கேரள சட்டமன்றத்தை கம்யூனிஸ்ட் கைப்பற்றியது அப்பொழுது துணைப்பாடநூலில் “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது” நாவலையும் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரத்தில் ஒரு முசல்மானின் புத்தகத்தை நான்டீட்டெய்லாக ஏற்றுக் கொண்டதை கேரள இலக்கிய வாசக உலகம் அதிசய நிகழ்வு என்று கூறுகின்றார்கள்.

முதலில் கடுமையாக எதிர்த்த அச்சுமோனனும் பஷீரின் நாவலை நான்டீடெயிலாக தேர்வு செய்த கமிட்டியில் இருந்தார் என்பதும் ஒரு அதிசயம் என்கின்றார்கள்.

1954ம் வருடம் பாத்துமாவின் ஆடு நாவலை எழுதியவர் ஜந்து வருடங்களுக்கு பிறகுதான் வெளியிட்டேன் என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இந்த கதை எழுதிய பொழுதுகளில் தூங்காமல் இரவு, பகல் என கடுமையான பணியினால் மனஅழுத்தம் ஏற்ப்பட்டு சிகிச்சை பெற்ற பொழுது எழுதியது என்கின்றார்.

பஷீர் அவர்கள் நெடுங்காலமாக நாடோடியாக அலைந்து திரிந்து ஒரு ஏகாந்த வாழ்க்கைக்கு பிறகு மூக்கு நுனி கோபத்துடன் தலயப்பிரம்பில் அவர் வீட்டுக்கு திருப்பி வருகின்றார். அவர் தனியாக எழுதுவற்கும் சிந்திப்பதற்குமாக வீட்டுக்கு எதிரே ஒரு சிறிய ஓட்டு வீடு! அது ஒரு அழகான வீடு என விளிக்கின்றார், அதை கட்டிடமாக கட்டுவதற்கு கல்லும் மண்ணும் சுமந்தேன் என்கின்றார்.

அழகுக்காக சில வேலைப்பாடுகள் செய்திருக்கின்றேன் உயரமாகக் கல்கட்டி, வெள்ளை மணல் தூவிய முற்றத்தைச் சுற்றிலும் அழகழகான செடிகள் இருந்தன. மலர்ப்பந்தலில் முல்லையும், பிச்சிபூவும் படர்ந்திருந்தன, முற்றத்தின் ஓரங்களில் கொய்யா மரங்கள் வளர்ந்துகொண்டிருந்தன. குடிப்பதற்கும், குளிப்பதற்குமென அங்கே இரண்டு குளங்கள் இருந்தன, தோட்டம் நிறைய தென்னையும் வாழையும் மற்றும் பல வகையான விருட்சங்களையும் நட்டு இருக்கின்றேன்.இதில் மாமரமும் உண்டு என்கின்றார்.

கற்பனையில் நாம் நினைக்கும் பொழுது எவ்வளவு அழகான வீடு! கிராமத்து வீடுகள் என்றாலே மிக அழகு, தூய்மையான காற்று, சுற்றிலும் மரங்கள் என அவர் குறிப்பிடுகையில் நம் முகத்தில் குளிர் காற்று வீசுகின்றது அவரின் வர்ணணையில்.

ஆனால் அவர் ஏகாந்த வாழ்க்கையில் இருந்த போது அந்த அழகான வீட்டை ஒரு அதிகாரிக்கு வாடகைக்கு விட்டுவிடுகின்றார்கள் அவரின் சகோதரர்கள். அதனால் எப்பொழுதும் தனிமையில் இருக்கும் பஷீர் தன் சகோதரிகள், சகோதரர்கள் அவர்களின் நிறையக் குழந்தைகள் அவருடைய “உம்மா” என்று எப்பொழுதும் சந்தைக்கடை போலிருக்கும் ஓலைக் கூரை வேய்ந்த வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை. 

இதில் தன் சகோதரி பாத்துமாவின் ஆடு ஒரு கதாபாத்திரமாக அந்த வீட்டில் சுதந்திரமாக உலாவுகின்றது. அவருடைய ஒரு நாவல் புத்தகத்தை தின்றும் விடுகின்றது. அது மட்டுமில்லாமல் குழந்தையின் அரைநிஜாரின் பையில் வைத்திருந்த ஆப்பத்தை சுவைக்க நிஜாரை தின்கின்றது. பையிலிருந்த சில சில்லரைக் காசுகளையும் சேர்ந்து விழுங்கி விடுகின்றது. ஆட்டின் மலத்தில் காசு வருமா...? என்று அன்றைய நாள் முழுவதும் அதன் மலத்தை சோதித்து பார்த்தேன் காசு வரவில்லை என்று சிரிக்கின்றார்.

பள்ளிக்கு போகும் சில பெண்கள் குறிப்பாக “சுருட்டை முடிக்காரி” ஒருத்தி தான் ஒரு எழுத்தாளர் எனவும் தன் எழுத்துகளால் கவர்ந்து தன்னைப் பார்த்து செல்கின்றாள் என நினைத்து பெருமிதம் கொள்கின்றார்...! 

ஒரு நாள் அவரை நோக்கி வருகின்றார்கள் அந்தப் பெண்கள். ஆட்டோகிராப் போட பேனாவை எடுத்து தயாராக வைத்துக் கொள்கின்றார் ஆனால் அந்த பெண்களோ சாம்பக்காய் (புளியம்பழம்) கேட்கின்றார்கள்...அவர்கள் நாவில் எச்சில் ஊற பார்த்தது தனக்கு பின்னால் இருந்த சாம்ப மரத்தில் தொங்கும் சாம்பக்காய்களை என்று தெரிந்து, கோபத்தில் சாம்பக்காய்களை விலைக்கு விற்கின்றார் அதுவும் சிறிய பழங்களாக தருகின்றார். அவர்கள் பெரிய பழங்களாக கேட்கின்றார்கள் தர மறுக்கின்றார். அதே நேரத்தில் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்த கறுப்பான ஒரு பெண்ணுக்கு கேட்காமல் பெரிய பெரிய சாம்பக் காய்களாக பறித்து நிறைய தருகின்றார். 

அடிக்கடி சாயா குடிக்கின்றார், பீடி பற்ற வைத்துக் கொள்கின்றார் குழந்தைகளுக்கு நேந்திரன்பழம், சக்கபழம்(பலா), புர்த்திசக்க(அன்னாசிபழம்) வெட்டி தருகின்றார். வீட்டு செலவுக்கு என்று பணம் தருகின்றார், சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிக்க தர மறுக்கின்றார், என சுவாரஸ்யமான சின்ன சின்ன சம்பவங்களை பிசகில்லாமல் விவரிக்கின்றார்.

பாத்துமாவின் ஆடு கர்ப்பமாகின்றது அதன் பிரசவத்தை எல்லாரும் எளிதாக எடுத்துக் கொள்ள பஷீர் மிகுந்த பரபரப்புடன் இருக்கின்றார். அது அழகான ஒரு குட்டியை ஈன்றெடுக்க அதை கொஞ்சுகின்றார், ஆட்டுப் பாலை விற்று தன் குடும்ப செலவுகளை சாமாளிக்கலாம் என்று பாத்துமா இருக்க, வீட்டாட்கள் ஆட்டுப் பாலை திருடிக் குடிக்கின்றார்கள், பாத்துமா இவரிடம் முறையிட இவர் சமரசம் செய்து அவளே வீட்டாட்களுக்கு தினமும் பால் தருகின்றாள் என கதையை முடிக்கின்றார், ஆனாலும் படித்து முடித்து சில வருடங்களாகியும் நம் மனதை விட்டு அகலாதிருப்பது பாத்துமாவின் ஆடுவும்! மற்றும் அலட்டி திரிந்த பஷீர் தாத்தாவின் அலட்டலான எழுத்துகளும். 

பாத்துமாவின் ஆடு நாவலைச் செம்மையாக மொழி பெயர்த்த குளச்சல் மு. யூசுப் அவர்கள் சில வார்த்தைகளை மலையாள மொழியில் உள்ளதை அப்படியே தருகின்றார் . அதற்கான விளக்கத்தை கீழே கொடுத்திருக்கின்றார். சில மொழி பெயர்ப்பு நூல்களில் பார்த்தால் சில வார்த்தைகளை அப்படியே தமிழில் மொழி பெயர்க்கின்றார்கள் அது அந்த எழுத்தாளர்களின் தன்மையை, கற்பனையை சிதைத்து விடுகின்றது அப்படிச் செய்யாமல் இப்படித் தந்தமைக்காக யூசுப் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
---------------------------------------
பதிப்பகம் : காலச்சுவடு,
விலை : 90.00
---------------------------------------
மேலும் வாசிக்க

1/16/13

சா தீ - சிறுகதை அறிமுகம் வெட்டிக்காடு ரவி

1 கருத்துரைகள்
தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு கிர் என்று மனதில் தோன்றியிருக்குமே? சமீப காலமாக மருத்துவர் ராமதாஸ் ஒரு பக்கம் தொடை தட்டிக் கொண்டு இருக்கிறார்.  காரணம் தர்மபுரி கலவரம் என்பது இன்னமும் அணையாத நெருப்பாக, புகையாக இன்னமும் நமக்கு தெரிந்து கொண்டே இருக்கின்றது.

இரண்டு பதிவுகளுக்கு முன்பு திரு. வெட்டிகாடு ரவி மூலம் அறிமுகமான விதையுறக்கம் என்ற கதை தொடர்பான தொடர்ச்சி பதிவு இது.

இதை வெளியிட சற்று காலதாமதம் ஆகி விட்டது. அதன் தொடர்ச்சியே இந்த பதிவு. தற்போது பெங்களூரில் வசித்துக் கொண்டிருக்கும் நண்பர் திரு. ரவி (வெட்டிக்காடு என்ற வலைதளத்தில் தனது கிராமத்து சிந்தனைகளை அப்படியே எழுதிக் கொண்டிருப்பவர்) 

திரு.ரவி அனுப்பிய இந்த கதையின் நகலை அப்படியே வலையேற்றுகின்றோம்.  

நிச்சயமாக இந்த கதை வெறும் கற்பனை அல்ல. வாழ்ந்தவரின் அனுபவம். வாழமுடியும் என்பதற்கான அத்தாட்சி பத்திரம். 

சாதி என்பது இன்றைய காலகட்டத்தில் எத்தனை கொடூரமாக மனிதர்களை பிரித்து வைத்துள்ளது என்பதை யோசிக்கும் போது முந்தைய தலைமுறை எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை நாம் யோசிக்க உதவும் ஆவணம் இது.

சமத்துவம் என்று எளிதாக பேசுகின்றோம். ஆனால் எந்த சாதியில் பிறந்தாலும் அவர்களுடன் நேசத்துடன் வாழ முடியும் என்பதை திரு. அப்பாவு வாழ்ந்ததோடு அதை எழுத்தாகவும் மாற்றி வைத்துள்ளார்.  

திரு. ரவி மூலம் தமிழ்ச்செடி இங்கே வலையேற்றுவதை பெருமையாக கருதுகின்றது.

மொத்தமாக இந்த பத்து கதைகளை விரும்பும் நேரத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்க.  

இந்த கதையின் ஆசிரியர் வெகுஜனம் அறிந்த பிரபல்யம் அல்ல. 

ஆனால் ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். 

தான் வகித்த பதவியை நூறு சதவிகிதம் நேர்மை என்ற அளவுகோலோடு மட்டும் வாழ்ந்து காட்டியவர். எளிமையான வாழ்க்கை என்றால் இன்னமும் நாம் காந்தியை தான் உதாரணம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் ஓராயிரம் மகாத்மாக்கள் திரு. அப்பாவு போன்றவர்கள் வாழ்ந்து காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தனது சாதிக்கு அப்பாற்பட்டு மற்ற அத்தனை மக்களையும் அரவணைத்து வழிகாட்டியாகவும் வாழ்ந்து காட்டியவர்.

பெயர் அப்பாவு.

மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர்.  வருமான வரித்துறை அதிகாரியாக உயர் பதவியில் வாழ்ந்தவர். இதில் என்ன சிறப்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.  ஆமாம்.  தனது கடைசி கால பதவி முடியும் தருவாயில் கூட தன்னுடைய சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தவர்.

பணத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை நேசித்தவர். அதைத்தான் தனது கதைகளில் நாயகர்களாக உலாவச் செய்துள்ளார்.

நம்பமுடியவில்லையா?

உண்மைதான்.  நல்லோர் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது இந்த அப்பாவு போன்றவர்களால் தான் இன்று வரையிலும் சாத்தியமாகிக் கொண்டு இருக்கின்றது என்பதை எத்தனை பேர்கள் அறிவார்கள்.  

ஆதிக்க சாதியில் பிறந்து, நேர்மையின் முழு உருவாக வாழ்ந்தது கூட ஆச்சரியமல்ல. 

திரு. அப்பாவு இன்றும் நல்ல உடல் உடல் மன ஆரோக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

 ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் தங்களுடன் வாழ்ந்த பாதிக்கப்பட்ட சாதி என்ற பெயரில் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களையும் சரிசமமாக அரவணைத்து அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்து காட்டியவர்.  அவர்களை கதை  மாந்தர்களாக கதாபாத்திரங்களாக மாற்றி இந்த சிறுகதை படைப்பை உருவாக்கியுள்ளார்.

அவர்களைப் பற்றித் தான் இந்த கதையில் திரு. அப்பாவு எழுதியுள்ளார்.  

இதை கதையைப் பற்றி தனது பார்வையை வெட்டிகாடு ரவி எழுதியதை படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றியும் நல்வாழ்த்துகளையும் தமிழ்ச்செடி சார்பாக திரு. அப்பாவு மற்றும் ரவிக்கு இங்கே எழுதி வைக்கின்றோம்.










திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து தமிழ்ச்செடி முதல் முறையாக நடத்தும் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா

அணைவரும் வருக.

விழா குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.
மேலும் வாசிக்க

1/3/13

தலைவா, வா! - புத்தக விமர்சனம்!

3 கருத்துரைகள்



ஒரு முக்கியமான புத்தகம் வாங்கச் சென்ற போது கண்ணில் பட்டது இந்த புத்தகம். தீர்ந்து போயிருந்த புத்தகங்களின் மிச்சமாய் ஒரே…ஒரு…புத்தகம் மட்டுமே இருந்தது. சில பக்கங்களில் சரியாக எழுத்துகள் அச்சாகவில்லை. "வேற புக் இல்லைங்களா?" என்றேன் "இல்லை இது ஒண்ணுதாங்க இருக்கு!" என்றார் புத்தக கடைக்காரர். சரி படிப்போம் என்று வாங்கி வந்துவிட்டேன்.

"பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்து முடித்துதான் எழுவீர்கள்." என்று பின்னட்டையில் எழுதியிருந்தார்கள். நான் படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது அது உண்மை என்று.

பெரும்பாலான தன்னம்பிக்கை இதழ்களில், ஒரு அறிவுரையாக, ஒரு கட்டுரையாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றமடைந்த பல தொழில் அதிபர்களைப் பற்றி, அவர்களின் வெற்றி தந்த சூத்திரங்களை அலசி ஆராய்ந்து மேற்கோள் காட்டி எழுதியிருப்பார்கள். அது போன்ற புத்தகங்களை தினமும் ஒரு பகுதி என்கின்ற ரீதியில்தான் நான் படிப்பேன். ஆனால் உண்மையில் முழு மூச்சாக படித்து முடிக்கக் காரணம் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு கதை போல கொண்டு போயிருக்கின்றார்.

அது மட்டுமில்லாது இப்பொழுது திருப்பூரில் தொழிலில் இருக்கும் பொருளாதார மந்த நிலையின் காரணமாகவும், சில தவறுகளினாலும் எனது வண்டி கொஞ்சம் சிரமமான நிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

விக்னேஷ் என்பவர் ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி. சென்ற வருடத்தில் இருந்ததை விட இவரின் குழு விற்பனையில் மந்தநிலை எட்டவே, என்ன தவறு செய்தோம் என்பதை கண்டுபிடிக்க இயலாமல் இருக்கும் நிலையில், ஒரு நண்பரின் மூலம் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கும் "சந்திரமௌலி" என்பவரிடம் சென்று ஆலோசனை பெறுகின்றார், "குருப்பயிற்சி" என்று அவரிடம் வாரம் ஒரு முறை சென்று அவரின் ஆலோசனையின் படி ஒவ்வொரு செயலையும் மாற்றம் செய்து தம்மை மேம்படுத்திக் கொள்கின்றார், தன்னுடைய செயல்களையும் மாற்றிக் கொள்கின்றான். அதில் முக்கியமானது அடுத்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் மற்றும் ஒருவரின் செயல்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும் என்பதை முக்கியமாக மாற்றிக் கொள்கின்றார். முன்னால் சிடுசிடுவேன்று தனக்கு கீழ் உள்ளவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்த வின்னேஷ், நண்பனைப் போல் அனைவரிடமும் பழகுகின்றான். இன்னும் பல ஆலோசனைகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றி பெறுகின்றான்.

இதை கதை போல, ஒரு நாவல் போல விறுவிறுப்பாக எழுதியிருக்கின்றார் நூலாசிரியர் சுரேகா. புதிய தொழில் தொடங்குவோர், செய்யும் தொழிலில் மந்த நிலையில் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஆகச்சிறந்த ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விக்னேஷ்க்கு ஒரு சந்திரமௌலி கிடைத்தது போல நமக்கும் சுரேகா அவர்களின் புத்தகம் வழி நடத்திச் செல்லும் என நம்புகின்றேன்! ஒரு சில எழுத்துப் பிழைகள் உள்ளது மட்டுமே, இந்த புத்தகத்தின் சிறு குறை எனலாம்! வலைப்பதிவில் எழுதுவது என்பது வேறு நாம் மட்டும்தான் படிக்க போகின்றோம், எழுதுவதும், திருத்துவதும் நாம்தான் அதனால் எதிர்பாராமல் ஏற்படும். ஆனால் புத்தகம் அப்படியல்ல, பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், படிக்கக் கூடும் அதனால் கூடுமான வரை பதிவர்கள் தங்கள் புத்தகங்களில் எழுத்துப் பிழை தவிர்க்கவும்.

பிரசுரம் : மதி நிலையம்
ஆன்லைனில் வாங்க : Discovery Book Place
மேலும் வாசிக்க
 

மேலே செல்