வணக்கம் நண்பர்களே!
நமது நாட்டில் சமூக பழக்க வழக்கங்களும் கலாசாரமும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நம்மை உயர்தர வாழ்க்கை முறைக்கு முன்னேற்றி (மாற்றி ) கொண்டுவரும் அந்நியநாட்டு(ஆங்கில) பழக்க வழக்கங்களும், கலாசாரமும் நமது பழம்பெரும் மொழியாம் தமிழ் மொழியைத் தரம் தாழ்த்திக்கொண்டுபோகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆம், தமிழில் ஆங்கில கலப்பில்லாமல் நம்மால் பேசமுடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். வாழும் தலைமுறையான நாமும் தமிழ்ச் சொற்கள் தெரிந்தாலும், ஆங்கில கலப்பில் பேசவே விரும்புகிறோம். ஏனெனில் நமது ஸ்டேட்டஸ் அதையே விரும்புகிறது.
ஆனால், வளரும் தலைமுறையான இன்றைய குழந்தைகளும் ஆங்கில கலப்பில்தான் பேசுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம்தான் அவர்களை ஆங்கிலத்தைக் கட்டாய முதன்மைப் பாடமாகவும், மற்றொரு அந்நிய மொழியை (உம்: பிரெஞ்ச்) கட்டாய இரண்டாம் பாடமாகவும் கொண்டுள்ள பள்ளிகளில் சேர்த்துவிடுகிறோம். அங்கு இந்திய மொழிகள் விருப்பப் பாடமாக உள்ளது. பெரியவர்களாக ஆனபின் அந்தக் குழந்தை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டி நாம் ஹிந்தி மொழியை அவர்களுக்குத் தேர்வு செய்து தருகிறோம். இதனால், நமது தமிழ் மொழி அவர்களிடத்தில் வெறும் பெயரளவுக்கே உள்ளது.
நாம் அவர்களிடத்தில் வீட்டில் தமிழில் பேசினாலும், பள்ளிகளிலோ ஆங்கிலத்தில் பேசவே அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். தமிழில் பேசினால் தண்டனை எனவும் சில பள்ளிகளில் இருப்பதால் வேறு வழியில்லாமல் குழந்தைகள் தமிழை மறக்க நேரிடுகிறது. அக்குழந்தைகள் இவ்வாறு ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமாவதால், அவர்கள் வீட்டில் பெற்றோர்களிடத்தில் ஆங்கிலத்தில் பேசவே மறைமுகமாக உந்தப்படுகிறார்கள். வேறு வழியில்லாமல் நாமளும் அவர்களிடத்தில் ஆங்கிலத்திலேயே பேசவேண்டி உள்ளது.
எனது உறவினர் குடும்பமாக அயல் நாட்டில் சுமார் இருபது வருடங்களுக்குமேல் வசித்துவருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தமிழை நமக்குச் சமமாகப் பேசுகிறார்கள். 'மாமா எப்படி இருக்கீங்க’ 'அத்தை எப்படி இருக்கீங்க’ என்றும் அழகாகத் தமிழில் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான். அவர்கள் குழந்தைகளிடத்தில் பேசும்போதும், அவர்களுக்குள் பேசும் போதும் தமிழில் பேசுகிறார்கள், எங்களை அக்குழந்தைகளிடத்தில் அறிமுகம் செய்யும்போதும் மாமா, அத்தை என்று தமிழிலேயே அறிமுகம் செய்கிறார்கள். இதனால், அவர்கள் தமிழ் மொழியினை அறிய வாய்ப்புக் கிடைக்கறது.
இதையே நம்மூரில் எடுத்துக்கொள்ளுங்களேன், ' hi, uncle how are you?' என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நாமும் அவர்களுக்கு , ' ya i'm fine' என ஆங்கிலத்தில் பதில் சொல்லியே பழகிவிட்டோம்.
எனவே, குழந்தைகள் தமிழை முடிந்தஅளவு பேசிப்பழக நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள், திருக்குறள், ஆத்திச்சூடி புத்தகங்கள் என குழந்தைகளின் மனது ஏற்கும் அளவுக்குத் தமிழை அவர்களிடத்தில் உட்புகுத்தலாம். அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய தமிழ் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு சொல்லித்தரலாம்.
ஆங்கில கார்ட்டூன், பொம்மை படங்களைப் பார்க்கவிடாமல் தமிழில் வரும் கார்ட்டூன், பொம்மை படங்களை பார்க்கச் சொல்லலாம். சிறுவயதில் நாம் தமிழில் கதை கேட்டு வளர்ந்ததைப்போல, குழந்தைகளுக்கும் தமிழில் கதைகளைச் சொல்லலாம்.
குழந்தைகளின் வருங்காலத்தைக் கவனத்தில்கொண்டு அவர்கள் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக எடுத்தாலும், தமிழை இரண்டாம் முதன்மைப் பாடமாக எடுத்து அவர்கள் மூலம் தமிழை அழியவிடாமல் வளரச் செய்வது தமிழனான நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழ்செடிக்காக
6 கருத்துரைகள்:
தமிழில் பேசினால் தங்களின் தரம் குறைந்து விடுமோ என்று நினைக்கின்றனர் சிலர்.நமது தாய்மொழியை ஏன் மற்றவர்களுக்காக விட்டுகொடுக்க வேண்டும்
தாய்மொழியில் பேசும் குழந்தைகள், பன்மொழி ஆற்றல் கொண்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. தாய்மொழி அடையாளம் இல்லாதவர் அந்நிய மண்ணில் வெளளையர் முன் கூனிக் குறுகி நிற்பதையும் காண முடிகின்றது. ஆங்கிலம் அவசியம் ஆனால் தமிழே அத்தியாவசியம்.
எல்லோரும் கவனிக்க வேண்டிய பதிவு நன்றி
நம்மால் முடிந்ததை தமிழுக்கு செய்வோம்.
பகிர்ந்தமைக்கு நன்றி
தமிழ்ச்செடி குழுவினருக்கு.....
மிக தேவையான கட்டுரை.
//எனது உறவினர் குடும்பமாக அயல் நாட்டில் சுமார் இருபது வருடங்களுக்குமேல் வசித்துவருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தமிழை நமக்குச் சமமாகப் பேசுகிறார்கள். 'மாமா எப்படி இருக்கீங்க’ 'அத்தை எப்படி இருக்கீங்க’ என்றும் அழகாகத் தமிழில் அழைக்கிறார்கள்//
ஆஸ்திரேலியா, கனடாவில் உள்ள தமிழ் குழந்தைகள் அழகாக தமிழ் கதைப்பார்கள். இந்த இலங்கையில் அது சிங்கள ஊராக இருந்தாலும் கூட அங்கு தமிழ் பள்ளிக் கூடங்களில் தமிழிலேயே தமிழ் பிள்ளைகள் படிக்கிறார்கள். தமிழ் ஊராக இருந்தாலும் தமிழிலேயே தமிழ் பிள்ளைகள் படிக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலே இருந்து தமிழுக்கு குரல் கொடுக்கிறார்களாம்!
Post a Comment