12/5/12

எழுத்தறிவித்தவன் இறைவன் - என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்




என் இனிய தமிழ் செடி உறவுகளே!  தன் தாய் மொழியை தன் உயிரைப்போலவே மதித்து தன் சந்ததிகளிடம் எவன் கொண்டு சேர்க்கிறானோ அவன் அந்த மொழி பேசும் மக்களின் மரியாதைக்கு உரியவன். நம் செடியில் இது வரை தமிழாசிரியர்களை பற்றி நண்பர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கம்.

என் பள்ளி பருவத்தில் 12 ஆம் வகுப்பு வரை பல தமிழ் ஆசிரியர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் பலவிதமான குணத்தில் இருந்தாலும் அவர்களின் தமிழ் மொழி திறமை என்னை பெரிதும் வியக்க வைத்துள்ளது. தமிழ் மொழி எனபது நம் மொழி மட்டுமில்லை நமது அடையாளம்  என்பதை எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் இவர்களே. முதலில் என் ஆரம்ப பள்ளி ஆசிரியரை பற்றி பார்ப்போம் :

தார்ச் சாலை  வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் பிறந்த நான் பள்ளி செல்ல இரண்டு கிலோ மீட்டர் நடந்து  பக்கத்துக்கு ஊரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்த பள்ளியில் நான் சேர்ந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. என் தந்தையார் என்னை மிதி வண்டியில் அமர வைத்து என்னை அழைத்துச் செல்வார். என்னை போலவே இன்னும் பல சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இருந்தனர், அவர்களில் சிலர் அழுது  கொண்டும் இருந்தனர். அந்த கூட்டத்தைப் பார்த்து எனக்கும் பயம் வந்தது, உடனே நான் “அப்பா வீட்டுக்கு போலாம்...!” என்று நச்சரிக்க தொடங்கினேன் காரணம் ஆசிரியர் என்பவர் அடிப்பார் என்ற காரணம். 

அப்போதுதான் நான் அவரை பார்த்தேன் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் அமர்ந்திருந்தார். சிகப்பு மற்றும் நீல நிறப் பேனாக்களை அவர் உபயோகித்து ஒரு மஞ்சள் நிற தாளில் அன்று சேர்ந்த, சேர வந்திருந்த குழந்தைகளின் பெயர்களை எழுதி கொண்டு இருந்தார். அவர்தான் வாத்தியார் என்று என் அப்பா சொன்னார். கூடுதலாக “நீ...! அழாமல் இருந்தால் அவர் மிட்டாய் தருவார்....” என்றும் கூறினார். 

நான் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு அமைதியாகி நின்று அவரின் செய்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு பெற்றோரையும் அழைத்தார், குழந்தைகளின் பெயரைக் கேட்டு, அந்த குழந்தைகளின் கைகளை தூக்கி தலை மேல் போட்டு குறுக்கிலிருந்து காதை தொடச் சொன்னார் அங்கிருந்த அத்தனைக் குழந்தைகளும் ஒவ்வொருவராக செய்து முடித்ததும் பட்டியலில் சேர்த்துக் கொண்டே வந்தார். 


என் முறை வந்தது...! என் அப்பா ஆசிரியரின் பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்,  நான் என் அப்பாவின் மடியில் அமர்ந்தேன்.

“பையன் பெயர் என்ன? என்றார்.” 

என் அப்பா “சசிக்குமார்” என்கிறார் அவர் அந்த தாளில் என் பெயரை எழுதி விட்டு என்னையும் காதைத் தொடச் சொன்னார். எனக்கு கொஞ்சம் கை எட்டவில்லை...! இருந்தாலும் என் பெயரை எழுதி விட்டு சரி நீங்கள் விட்டு விட்டுச் செல்லுங்கள் என்றார். என் அப்பாவும் கிளம்ப நான் இடம் மறந்து அழ ஆரம்பித்தேன். 

உடனே அந்த வாத்தியார் எனக்கு ஒரு மிட்டாயைக் கொடுத்து “டேய் அழக் கூடாது...! அழுதா! எப்படி பெரிய ஆளா ஆவது?” என்று சொல்லி விட்டு என்னையும் என் போன்ற சில குழந்தைகளையும் அழைத்து அடுத்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே நிறைய குழந்தைகள் இருந்தனர். அவர்களோடு நானும் தரையில் அமர்ந்தேன். 

இங்கிருந்துதான் தொடங்குகிறது என் பள்ளி வாழ்க்கை. ஆசிரியர்களின் அறிமுகமும் இப்போது தான் தொடங்கியது. அழும் குழந்தைகளுக்க்காக அவர் பல சேஷ்டைகள் செய்து காட்ட நானும் என் அழுகை மறந்து சிரித்தேன்.  அந்த ஆசிரியரின் பெயர் ராஜ மாணிக்கம் பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமான நபராகவும் இருந்தார். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டைதான் அணிவார். அவரின் கம்பீரம் இன்றும் என் நினைவில் உள்ளது. அவர்தான் எனக்கு என் விரல் பிடித்து அ ..ஆ இ ஈ  எழுதி பழக வைத்தார். 1 2 3  என்று எண்களை அறிமுகம் செய்து வைத்தார். உயிர் மெய் எழுத்துக்களை அறிமுகம் செய்து என் கல்வி என்ற உயிரின் தீபத்தை ஏற்றினார். நிறைய கதைகள் சொல்லி எனக்கும் என் போன்ற சிறார்களுக்கும் பள்ளிக்கூடம் பற்றிய பயத்தை போக்கியவரும் அவரே. 

என் வாழ்வின் ஒரு புதிய கதவு அன்று தான் திறந்தது. இன்று வரை என் கையெழுத்து அழகாக உள்ளது என்று மற்றவர்கள் என்னிடம் சொல்லும் போது அந்த புகழுக்கு சொந்தகாரர் அய்யா ராஜமாணிக்கம் அவர்கள்தான். அவரின் கை எழுத்து அவ்வளவு பிரமாதமாக இருக்கும், சிறு அடித்தல் திருத்தல் கூட இருக்காது கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். மணி..... மணியாக இருக்கும், அவர் என் கை பிடித்து இரட்டைக் கோடு போட்ட, நான்கு கோடு போட்ட தாள்களில் எழுதப் பழக்கியது தான் முக்கியக் காரணமாக இருந்தது. 

மூன்றாம் வகுப்பு வரை அவரே என் வகுப்பின் ஆசிரியராக இருந்தார்.  எனக்கு மட்டுமல்ல, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் அவர் மேல் அதிக அளவு பாசமாக இருந்தனர். அன்புடன் சேர்த்த பண்புடனும், கண்டிப்புடனும் பாடங்களை நடத்துவார். வகுப்பறையில் குழந்தைகள் திடீரென்று மலம் சிறுநீர் போய் விட்டாலும் முகத்தை சுழிக்காமல் அவர்களுக்கு ஆசிரியரே உதவி செய்து சுத்தம் செய்வார். 


விளையாட்டு மற்றும் உடைகளை நேர்த்தியாக அணிதல் மற்றும் பள்ளியினைச் சுத்தப் படுத்துதல் போன்றவற்றையும் கற்றுத் தந்தார். ஓவியம் வரைவார், பாடல்கள் பாடுவார், விடுகதைகள் போடுவார், இப்படி  சிறார்களுக்குப் பிடித்த மாதிரி பாடங்கள் எடுப்பது மட்டுமில்லாமல் முடிந்தவரைக்கும் மாணவர்களைப் பாராட்டு மழையில் நனைய வைப்பார். அதனாலேயே இன்னும் என் போன்ற மாணவர்களின் மனதில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் இப்போது எந்த பள்ளியில் விரல் பிடித்து எழுத கற்றுத் தருகின்றார்கள் ?

அவர் என் பக்கத்துக்கு ஊர்தான்! அவருக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு ஆண்கள், ஒரு பெண் முறையே மூவரையும் நன்கு படிக்க வைத்து ஒருவரை போலீஸ் அதிகாரியாகவும், இன்னொருவரை எல்.ஐ.சி யில் அதிகாரி ஆகி பெண் பிள்ளையை ஆசிரியராகவும் உருவாக்கியுள்ளார். அவர் ஓய்வு பெற்ற பின்னும் ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார். இப்போது எடுப்பது இல்லை. இப்போது அவர் ரீ சார்ஜ் செய்யும் கடை வைத்து கவனித்து வருகிறார், எப்படியாவது அவரை வாரத்தில் மூன்று முறை சந்தித்து விடுவேன் அவருக்கு உடல் நலமில்லாமல் போனால் என்னைத்தான் அழைப்பர், நான் சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். இன்று வரையிலும் அவர் எனக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார் நிறைய படி எழுது என்று பல ஆலோசனைகளையும் தருகின்றார். 

நான் எனது தம்பி எனது தங்கை ஆகியோர் அவரிடம்தான் படித்தோம், ஆனால் அவரை போலவே ஆசிரியர் ஆகவேண்டும் என்று நானும் எனது தம்பியும் நினைத்தது இல்லை. என் தங்கை மட்டும் அவரை போலவே ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டார். வெற்றியும் பெற்று விட்டார். 

இதை அவர் என்னிடம் அடிக்கடி சொல்லி சந்தோசப் படுவார்! இப்படி பட்ட கொடுப்பினை இப்போது வரும் தலைமுறைக்கு கிடைப்பது இல்லை, காரணம் நமது கல்வி முறை ஆரம்ப பள்ளி தமிழில் படித்தால் கேவலம் என்ற மனப்பான்மை பெருகிவிட்டது நம் மக்களிடம், ஆகவே என் கிராமத்தில் கூட பொருளாதார ரீதியாக துன்பப் பட்டு ஆங்கில வழிப் பள்ளிக்குதான் அனுப்புகின்றனர் ..ரொம்பவும் வேதனைப் படக் கூடிய விசயமாக தெரிகின்றது எனக்கு.

அவ்வளவு சிறப்பான ஆசிரியர் என் ஆரம்ப பள்ளியில் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இன்று வரை என் படிப்பின் சிறப்புக்கு அவரே காரணம் அவரின்றி நன்கு அமைந்திருக்காது என் கல்வி வாழ்க்கை. “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று சொல்லுவார்கள் எனக்கும் என்போன்ற என் சக மாணவர்களுக்கும் அவர் தான் என்றுமே இறைவன்! அவரால் விரல் பிடித்து எழுத பழகியவர்கள்தான் இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும், உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். அவரின் மாணவன் என்பதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்கிறேன் ஐயா ராஜமாணிக்கம் எனக்கு இறைவனே

நம் தாய் மொழியில் படிப்பது அவ்வளவு கேவலமாய் போய் விட்டதா ?ஆங்கிலம் வேண்டும்தான் அதற்காக நம் உயிர் போன்ற தமிழை தூக்கி எரிந்து கொலை செய்வதா? நாமே நம் மொழியினை மதிக்காமல் போனால் வேறு யார் மதிப்பார்கள் ? என்கின்ற வினா என் மனதில் எழுகின்றது அனைவருக்கும் இப்படி பட்ட ஆசிரியர்கள் வாய்க்க வேண்டும்! வெறும்படிப்பினை மட்டும் சொல்லித்தருகிற கல்வியாளர்கள் வேண்டாம்! படிப்புடன் நாம் வாழத் தேவையான அனைத்து விசயங்களையும் சொல்லி தருகிறவர்கள் வேண்டும் என்பதே என் கனவும், ஆசையும்!

வெறும் நூறு சதவிகித தேர்ச்சிக்கு மட்டும் தான் பள்ளிகளா? மாணவர்கள் எந்திரங்களா? நாம் தெரிந்தே வரும் தலைமுறைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை! இயற்கை வளங்களைக் காக்க மறந்தோம், நீலம், தானே போன்ற புயல்களை சந்திக்கின்றோம். பல பேரிடர்பாடுகளை சந்திக்கின்றோம் அதைப் போலவே நம் தாய் மொழியையும் இழக்கப் போகின்றோம். சமூக சீர்கேட்டின் ஆதாரமாக இருக்கப் போகின்றது. மொழி என்பதன் அடித்தளத்தில் தான் கலாச்சாரம் உருவாகின்றது. வேறொரு மொழி நம்முடைய கலாச்சாரத்தின் கூறுகளை சொல்வதில்லை. நமது அடிப்படை வாழ்க்கை முறையே மாறிவிடும்.  அப்படித்தான் தற்போது மாறிக் கொண்டிருக்கின்றது.

குழந்தைகள் ஆங்கில மொழியில் படிக்க வைப்பது தவறில்லை.  ஆனால் வீட்டில் தாய்மொழியை கற்றுக் கொடுத்து பேச எழுத வைக்கலாம். ஆங்கில வழி பள்ளிகளில் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை நாம் தமிழர்கள்தானே? நம் மொழியை பேசுவதில் என்ன கேவலம் ? “தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” என்று பாடிய புரட்சி கவிஞர் இன்று இருந்தால் கொலைவாளினை எடுத்து நிறைய பேர்களின் தலைகளை சீவி இருப்பார்.

கல்வியில் மட்டுமில்லை! அனைத்து இடங்களிலும்...!  ஏன்? வங்கிகளில் தமிழில் ஒரு கடிதம் எழுதினாலே கேவலமாகப் பார்கின்றனர் தமிழர்களே! தமிழை நிராகரிக்கின்றனர். எனது முக நூல் கணக்கை நான் தமிழில் வைத்து இருப்பதாலேயே அதிக நண்பர்கள் எனது நட்பு கோரிக்கையை ஏற்க மறுக்கின்றனர். ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து எழுதி தங்கீலிஷ் என்ற புது மொழியை உருவாக்கி உள்ளனர். 

இது நம் மொழிக்கு செய்கின்ற துரோகம் இல்லையா...? இரண்டு மொழிகளையும் சேர்த்து தான் நாம் கேவலம் செய்கிறோமே! அப்படி எந்த விதத்தில் நம் மொழி குறைந்து போய்  விட்டது? தொழில் வாழ்க்கைக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் மட்டும் தான் இன்று உலகம் முழுக்க ஆங்கிலம் கோலோச்சுகின்றது. ஆனால் சம்பாதிப்பது வாழத்தானே? வாழ்க்கை மொழியென்பது நமக்கு தமிழ் தானே?  

மொழி எனபது நமது அடையாளம் அந்த அடையாளத்தை தொலைத்துவிட்டு நாம் எப்படி வாழ முடியும்? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்குகிறோம் வெறும் முழக்கத்தோடு நின்றுவிடுகிறோம் ..அதனாலேயே நம் தமிழை நாமே கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறோம் எத்தனை காவியங்கள்..காப்பியங்கள்  நம் அழகுத் தமிழில்..? 

தாயை பழிப்பதும் நம் தமிழை பழிப்பதும் ஒன்றுதான் தாயை பழித்தால் எவ்வளவு கோபம் வருகிறதோ...! அது போலவே தமிழை பழித்தாலும் பெரும் கோபம் வரவேண்டும் நண்பர்களே! 

தமிழ்செடிக்காக........
செல்வன்: சசிமோகன்குமார்

6 கருத்துரைகள்:

Thozhirkalam Channel on 12/05/2012 said...

உங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.....

Unknown on 12/05/2012 said...

தலையைத் சுற்றி காதைத் தொடும் பழக்கம் இன்றும் அரசு பள்ளியில் நடைமுறையில் உள்ளதென்று நினைக்கின்றேன். தனியார் பள்ளியில் சட்டைப் பையில் பணம் இருந்தால் போதும் நிறைய இடங்களில் பழைய ஞாபகங்களை கிளறியது இன்னும் நிறைய எழுதலாம் சசிகுமார்!

ஜோதிஜி on 12/05/2012 said...

சுகமான நினைவுகள்.

Unknown on 12/05/2012 said...

நன்று!!!நன்று!!!

Unknown on 12/05/2012 said...

நன்று!!!நன்று!!!

காட்டான் on 12/06/2012 said...

அருமை.. உங்களுக்கு வாய்த்த ஆசிரியர் போன்று எல்லோருக்கும் வாய்க்கனும்.

 

மேலே செல்