12/31/12

தமிழ்ச் செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

2 கருத்துரைகள்


2012 நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றது. 2013 இன்னும் சிறிது நேரத்தில் நம் கைகளில் தவழும் ஒரு குழந்தையாக. கடந்த வருடங்கள் இனிப்பான பல நிகழ்வுகளை விட சில கசப்பான நிகழ்வுகளை கடந்திருப்போம்! இந்த வருடமும் இன்பத்தையும் கடப்போம். துன்பத்தையும் கடப்போம் ஆனால் நினைவில் நிற்பது அதிகம் கசப்புகளே! கசப்பே வேண்டாம் என்பது உணவுக்கு மட்டும் உகந்ததல்ல, நம் உளவியலுக்கும் நல்லதல்ல. 

இந்த வருடத்தில் நாம் பல துன்பங்களை கண்டு துவழாமல் உற்சாகமாக போராடி வென்றிருப்போம். அதே போல் இந்த வருடமும் இறைவனை நாம் வேண்டுவது துன்பத்தை தாங்கும் வல்லமை தாராய் எனக் கேட்போம் அது போதும். 

சிறு துன்பதிற்கும் கலங்கிடும் மனம். எதிர்காலத்தில் கடினமான வாழ்க்கைச் சூழலில் கடப்பது சிரமம். ஆகவே திடமான மனமே தருவாய் என நம் பிராத்தனையாக இருக்கட்டும். 

அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தமிழ்ச்செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! 

இப்படிக்கு

தமிழ்ச்செடி நண்பர்கள்
மேலும் வாசிக்க

12/26/12

சிறுகதை அறிமுகம் - வெட்டிக்காடு ரவி

2 கருத்துரைகள்
சிலர் வாழ்ந்த பிறகு வரலாறாக மாறுவார்கள். சிலரோ வாழும் போதே மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு தங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வண்ணம் வரலாறு போல வாழ்ந்து காட்டுவார்கள்.

வலைதளத்தில் வெட்டிக்காடு ரவி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு கிராம பின்புலத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை தொடங்கியவர்.  ஆனால் கல்வி என்ற ஆயுதத்தை கனகச்சிதமாக பயன்படுத்தி இன்று இன்று வாழ்வில் உச்சத்தை எட்டியவர். 

தனது தளத்தில் தன் அடிப்படை வாழ்க்கையை, வாழ்ந்த வாழ்க்கையை எந்தவித சங்கோஜமும் இன்றி பட்டவர்த்தனமாக அப்படியே எழுதி இன்னமும் நான் கிராமத்து வாசிதான் என்று நிரூபித்தவர்.  

இவர் எழுத்தில் சொல்லப் போனால் தொடக்கத்தில் பள்ளிப் பருவத்தில் ஆங்கிலம் பேச முடியவில்லையே என்று வருந்திய காலமும் உண்டு. ஆனால் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருந்த காரணத்தால் சரியான முறையில் தமிழ் பேச முடியாமல் போய்விட்டதே என்ற வருந்திய காலமும் உருவானது. 

அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு பணி மாறுதலாகி தற்போது பெங்களூரில் தொலைதொடர்பு மென்பொருள் உருவாக்கம் சார்ந்த நிறுவனத்தில் அலுவலக ரீதியாக உயர்ந்த  பதவியில் இருக்கின்றார்.

இன்று தனது சொந்த மாவட்டமான தஞ்சாவூர் பகுதியில் தன்னாலான சமூக முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார். கல்லூரிகளின் வாயிலாக தான் கற்று வைத்திருக்கும் வித்தைகளை எந்தவித பிரதிபலன் எதிர்பார்ப்பும் இன்றி மாணவர்களுக்கு கலந்துரையாடல் மற்றும் கூட்டங்கள் வாயிலாக உதவிக் கொண்டு இருக்கின்றார்.


தமிழ்ச்செடியில் தமிழ் ஆசிரியர்கள் குறித்து தற்போது வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் இவரின் தளத்தில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் அனைத்துமே அவரின் பள்ளிக்கூட நினைவுகள் மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் குறித்த விசயங்கள் தான் அதிகமாக உள்ளது. 

அவரின் தளத்தை தமிழ்ச்செடி அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றது.


இன்று பெரும் பாலும் கல்வி மூலம் ஒரு உச்சத்தை எட்டியவுடன் தனது பதவி தரும் சுகம், அந்தஸ்த்து, செல்வாக்கு, பணம் போன்றவற்றை வைத்துக் கொண்டு தனக்கு தகுந்த மாதிரி ஒரு முகமூடியை அணிந்து கொண்டு வாழும் சமூகத்தில் திரு.ரவிச்சந்திரன் ஒரு வித்தியாசமான இளைஞர். 


மற்றவர்களுக்கு முன் உதாரணமான நண்பரும் கூட.

அவரின் கடிதம் கீழே.

“விதையுறக்கம்” புத்தகத்தில் வரும் கதைகளை என் பார்வையில் தமிழ்ச்செடியில் பகிர்ந்து கொள்கிறேன். உறவு சிறுகதையின் நகல் பக்கங்களை இணைத்துள்ளேன்.

***
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு விடுமுறைக்கு வந்திருந்தபோது மதிய வேளையில் ஏதாவது படிப்பதற்கு புத்தகம் கிடைக்குமா என்று என் மாமானாரின் அலமாரியை குடைந்து கொண்டிருந்தேன். 

மருத்துவ நூல்களாக இருந்தது. அப்போது ஒரு சிறிய தமிழ்ப் புத்தகம் என் கண்ணில் பட்டது....“விதையுறக்கம் - அ. அப்பாவு” என்ற புத்தகம். ஒன்பது சிறுகதைகள் கொண்ட புத்தகம்.  சரி படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்தவுடன் என்னால கீழே வைக்க முடியவில்லை. 

தஞ்சை கிராமத்து மொழியில்எழுதப்பட்ட ஒவ்வொரு சிறுகதையும் அப்படியே என்னை வெட்டிக்காட்டிற்கு கடத்திச் சென்றது.  கிராமத்து நிகழ்ச்சிகளை கண்முன்பே கொண்டு வந்து நிறுத்தியது. வைரமுத்துவின் கரிசல்வட்டார மொழியை படித்த என்க்கு என் ஊரின் மனிதர்கள், வட்டார மொழி ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது.  அன்று இரவு நெடுநேரம் தூங்காமல் இரண்டாவது முறையாக அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். அ.அப்பாவு அவர்கள் வடுவூர் புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். 

என் மாமனாரின் உறவினர். தமிழ்நாடு வணிவ வரித்துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒரு நேர்மையான அதிகாரி.எப்போதோ ஒரு முறை விடுமுறைக்கு இந்தியா வரும் நான் அப்பாவு அவர்களை நேரில் பார்த்தது இல்லை. அடுத்த நாள் காலை அப்பாவு அவர்களுக்கு தொலைபேசி நீண்ட நேரம் உரையாடினேன். அடுத்த முறை இந்தியா வந்தபோது சென்னையில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தேன்.


இந்த முறை தீபாவளி பண்டிகைக்கு தஞ்சைக்கு சென்றபோது சிங்கப்பூரில் இருந்து எடுத்த வந்த புத்தகங்களை மூட்டை கட்டி வைத்து என் மாமானார் வீட்டில் போட்டு வைத்திருந்த மூட்டைகளிலிருந்து  சில  புத்தகங்களை எடுத்து வந்தேன்.

 “விதையுறக்கம் புத்தகமும்’ அதில் ஒன்று. 

சில நாட்களுக்கு முன்பு மீண்டும் “விதையறக்கம்” புத்தகத்தை படித்தேன்.  ஒரு சிலகதைகளை என் பார்வையில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தில் நடந்த உண்ம சம்பங்களின் அடிப்படையில் எழுதப்பட்டகதைகள் இவை.

உறவு:

கிராமத்தில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த பையனும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தபெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்படும் பிரச்சணைகளை விவரிக்கும் கதை. அதே சமயம் குடியானவனுக்கும் குடி பறையனுக்கும் இடையேயான் நட்பையும்சொல்லும் கதை !!!

1980-களின் ஆரம்பத்தில் வயலில் போர்செட் போட்டு மோட்டார் வாங்குவதற்காக சென்னை வந்திருக்கும் புள்ளவராயன் குடிக்காடு விவசாயியின் பார்வையில் சொல்லப்படும் கதை. 1980-க்கு முன்பு நான் சிறுவனாக இருந்த காலத்தில் காவிரி கரை புரண்டு ஓட மூன்று போக விவசாயம் தஞ்சைத் தரணியில் அமோகமாக நடைபெறும். 

ஆனால்… காவிரித் தண்ணீர் பிரச்சணை காரணமாக ஒரு போக விளைச்சலே இன்று சவாலாகிக் போணது. 1983-ஆம் ஆண்டு என் அப்பா எங்கள் வயலில் போர்செட் போட்டார்.  அப்போது 80 அடியில் வந்த தண்ணீரை இப்போது 400 அடிக்கு மேல் தோண்டி எடுக்க வேண்டியிருக்கிறது. நருவுசு, நடவுதல, தலைகூட்டுறது போன்ற தஞ்சை கிராமத்து வார்த்தைகள் கதையெங்கும் விரவிக் கிடக்கின்றன.

”மறுபடியும் பழனி பத்தி நெனப்பு….புத்துக்குள்ளேயிருந்து வெளியேர்ற பாம்பு மாதிரி என் நெஞ்சுக்குள்ளேயிருந்து வெளிவர ஆரம்பிச்சது”

“காக்கா கரயிர சத்ததுக்கே காத தூரம் போறவ கள்ளப் புருஷன் நெனப்பு வந்தா காவேரியையும் நீந்திப் போவா”

போன்ற அருமையான உவமைகள்.

குடியானவர் புள்ளவராயருக்கும் குடி பறையன் சுக்கிரனுக்கும் இடையேனா நட்பு, உறவு அப்படியே என் அப்பா, பெரியப்பா மற்றும் எங்கள் குடி பறையன்கள் கைலாசம், கலியன் ஆகிவர்களுக்குகிடையே இருந்த உறவை ஞாபகப் படுத்துகிறது. இந்த உறவு கிராமத்து மனிதர்கள் அனைவரும் அறிந்த ஒன்று… 

அதனால் எந்த பிரச்சினையிலும் கைலாசம், கலியன் ஆகிய இருவர் மீதும் யாரும் கை வைத்தது கிடையாது. 

இப்போதும் நான் ஊருக்கு செல்லும் போது “சின்னய்யா….” என்று பாசத்துடன் அழைக்கும் கலியன் மற்றும் அவர் தண்ணி போட்டு விட்டு அப்பா, பெரியப்பா கதைகள், அவர்களின் பெருமைகளை கண்ணீருடன் சொல்வதை என்றும் என்னால் மறக்க முடியாது.

கதையில் வரும் அப்பாசாமி கண்டியர் போன்ற மிராசுவை ஒவ்வொரு கிராமத்திலும் பார்க்கலாம் !!!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

இந்த கதைகளின் நகல் பக்கங்களை அடுத்த பதிவில் முழுமையாக வெளியிடுகின்றோம்.  படிக்க விரும்புவர்கள் அதனை தரவிறக்கம் செய்து கொண்டு படிக்க முடியும்.  காரணம் இது போன்ற அரிய படைப்புக்களை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதே தமிழ்ச்செடியின் குறிக்கோள்.
மேலும் வாசிக்க

12/20/12

எனது தமிழாசிரியர்கள் - முனைவர் இரா.குணசீலன்

9 கருத்துரைகள்


ஞாலமுதல்மொழி, திராவிடமொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான,  சிறந்த இலக்கியச்செல்வங்களைச் சங்ககாலம் முதலாக இன்றுவரை தொடர்ச்சியாகக் கொண்ட மொழி என்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தமிழ்மொழி என் தாய்மொழி என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் பெருமையாகக் கருதுகிறேன்.

“ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல மாணவனை உருவாக்கமுடியும்  நல்ல மாணவனால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்“ என்றொரு பொன்மொழி உண்டு.

நான் இன்று  தமிழ் விரிவுரையாளராக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் நல்ல மாணவனாக இருந்தேன் என்று நினைக்கவில்லை, எனக்கமைந்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்களாக அமைந்தார்கள் என்பதே காரணம். எனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் அவ்வப்போது எண்ணிப்பார்ப்பதுண்டு. 

என்னைக் கவர்ந்த மனதில் நிலைத்த எனது தமிழாசிரியர்கள் பலரையும் மொத்தமாக எண்ணிப்பாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த தமிழ்ச்செடி இணையத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு எனது கடந்தகாலத்துக்கு உங்களையும் அழைத்துச்  செல்கிறேன்.

பள்ளித் தமிழாசிரியர்கள்

சிவகங்கை மாவட்டத்தில், கல்லல் என்னும் கிராமத்தில் முருகப்பா மேனிலைப் பள்ளியில்தான் நான் 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை படித்தேன். பலநாட்கள் மரத்தடியில்தான் வகுப்புகள் நடக்கும். வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாடம் நடத்துவது என்பது அவர்களுக்குப் பெரிய சாதனையாக இருக்கும். அங்கு எனது தந்தை (மு.இராசேந்திரன்) தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். 

அவர் அடிக்கடி சொல்வார் “மேயப் போகும் மாடு கொம்பில் புல்லைக் கட்டிக்கொண்டு போகாது” என்று. இந்த பழமொழி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. 

எதையும், யாரையும் எதிர்பார்க்காது வேர்களைப்போல, நீரைப் போல இடத்துக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப என்னை வடிவமைத்துக்கொள்ள இந்த சிந்தனை பெரிதும் உதவியது. அவர் நன்றாக மரபுக்கவிதை இயற்றுவார். எங்கள் ஊரில் ஏதும் திருமண விழா என்றால் அவரிடம் வந்து பலரும் வாழ்த்துப் பாடல்களை எழுதிச்செல்வார்கள். அதனால் என் தந்தையைப் பலரும் புலவர் என்றுதான் அழைப்பார்கள். அவரது இந்த ஆற்றல் எனக்கு மரபுக்கவிதை எழுதவேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தியது.

6,7 ஆம் வகுப்புகளில் திருமதி. பாண்டியம்மாள் அம்மா அவர்கள் எனக்குத் தமிழ் எடுத்தார். அவர்களின் குரல்வளம் இப்போது நினைத்துபார்த்தாலும் காதுகளில் கேட்பதுபோல இருக்கிறது. கிராமிய மொழிநடையில் அவர் சொன்ன கதைகள், திருக்குறள் கருத்துக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
8,9,10 ஆம் வகுப்புகளில் திருமதி. நாகம்மை அம்மா அவர்கள் தமிழ் எடுத்தார். அவர்கள் அதிராத குரலில் தமிழை நயமாகப் பேசுவார். அவர்கள் சொன்ன நன்னெறிக் கதைகள் என்னை நிறைய சிந்திக்கவைத்தன.

11,12 ஆம் வகுப்புகளில் திரு குப்பால் அவர்கள் தமிழ் வகுப்பெடுத்தார். அவர் எங்கள் பள்ளியின் தலைமையாசிரியராகவும் இருந்தார். சங்க இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் இவரே. சங்ககாலக் கதைகள் பல சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவர் தமிழ் பேசியவிதம், பாடம் நடத்திய முறை தமிழ் மீது எனக்கு பற்று ஏற்படக் காரணமாக அமைந்தது.

கல்லூரித் தமிழாசிரியர்கள்

காரைக்குடி இராமசாமித் தமிழ்க்கல்லூரியில் நான் (பிலிட்) இளங்கலை தமிழ் பயின்ற காலத்தில் எனக்கு வந்த தமிழாசிரியர்கள் தமிழ்மொழியின் பல்வேறுதுறைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தனர். அதைக் கல்லூரி என்று யாரும்சொல்லமாட்டார்கள். வீடுபோலத்தான். அதன் தோற்றமும் அப்படித்தான் இருக்கும். ஐயா, அம்மா என்றுதான் ஆசிரியர்களை அழைப்போம். அவர்களும் மாணவர்களைத் தம் பிள்ளைகள் போலத்தான் நடத்துவார்கள்.

முதல்வர் திரு முருகசாமி ஐயா அவர்கள் எனக்கு படைப்பிலக்கியம் நடத்தினார். முதலாம் ஆண்டில் நடந்த கவிதைப் போட்டியில் கல்லூரியில் முதலிடம் பெற்றேன். அதற்குக் காரணம் அவர் பாடம் எடுத்த முறைதான். இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகளுக்கு அவர் என்னை அனுப்பிவைத்திருக்கிறார், என்னை அழைத்தும் சென்றிருக்கிறார். 

அவர் ஒவ்வொரு முறையும் சொல்வார். நாம் எந்தப்போட்டியில் கலந்துகொண்டாலும் நாம் வெற்றியடைகிறோமா? தோல்வியடைகிறோமா? என்று சிந்திக்கக்கூடாது. அதில் கிடைக்கும் அனுபவம் தான் மிகவும் பெரிது என்பார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. முதல்வர் அவர்கள், பாரதி, பாரதிதாசன் கவிதைகளையெல்லாம் அழகான இசையில் தன்னை மறந்து பாடுவார். குதித்துக் குதித்து அவர் பாடம் எடுத்த முறை இன்று நினைத்துப் பார்த்தாலும் கண்களில் நிழலாடுகிறது.

திரு.சுப்பிரமணியன் ஐயா அவர்கள் எங்களுக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பாடம் எடுத்தார். பழந்தமிழரின் புறவாழ்க்கை குறித்த பெருமிதம் அவர் நடத்தியமுறையால் எனக்கு ஏற்பட்டது. கல்லூரி விரிவுரையாளர் இப்படித்தான் பாடம் நடத்தவேண்டும் என்ற ஈர்ப்பு இவர் பாடம் நடத்திய முறையால் எனக்குள் முதலில் ஏற்பட்டது.

திரு.தியாகராசன் ஐயா அவர்கள் முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் எடுத்தமை என்னால் மறக்கவேமுடியாது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அவர் எடுத்துரைத்த முறை தனித்துவமானது. எந்த ஒரு இலக்கியமாக இருந்தாலும் மிக எளிதாகப் புரியவைத்துவிடும் அவரது அனுபவம் பாராட்டுதலுக்குரியது.எங்களைக் கல்லூரி நாட்களில் அதிகமாகச் சிரிக்கவைத்தவர் ஐயா அவர்கள்தான்.

திருமதி.வள்ளியம்மை அம்மா அவர்கள் கல்வெட்டுத்துறையில் பெரிதும் ஈடுபாட்டுடன் இருந்தார். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கல்வெட்டுகளையும் கண்டறிந்து எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணத்தை அவர் நடத்திய முறை இலக்கணம் பயிலும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.

திருமதி.மெய்யம்மை அம்மா அவர்கள் தண்டியலங்காரம் எடுத்தார். தம் கருத்தை எடுத்துரைக்க அவர் வெளிப்படுத்தும் உடலசைவு மொழிகள் மாணவர்களிடம் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தன.

திருமதி. புவனேஸ்வரி அம்மா அவர்கள் தமிழக வரலாறும் பண்பாடும் பாடம் எடுத்தார்கள். மாணவர்களிடம் அவர் அன்புடன் பழகுவார்கள். ஒருநாள் மெய்யெழுத்துகளைப் பற்றிப் பேசும்போது மாணவர்களை கரும்பலகையில் வந்து எழுதச் சொன்னார்கள். பலமாணவர்கள் சில எழுத்துக்களைத் தவறாக எழுதினர். என்னை அழைத்தபோது நான் சென்று தவறின்றி விரைவாகக் கரும்பலகையில் எழுதினேன். அப்போது அம்மா சொன்னார்கள். குணசீலன் நீங்க நிச்சயமாக விரிவுரையாளராகிவிடுவீர்கள் அது நீங்கள் எழுதும் முறையிலேயே தெரிகிறது. என்றார் அப்போது அந்த வார்த்தைகள் என்னைப் பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்தன.

திரு.ஞானசேகரன் அவர்கள் வானம் வசப்படும் என்னும் பெரிய புதினத்தை எடுத்தார். அவர் அடிக்கடி கையை மேலே தூக்கி உணர்ச்சிபொங்க பாடம் எடுப்பார். அவர் எப்போது பெரிய சத்தமிட்டுப் பேசுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர் வகுப்பில் மட்டும் யாருமே தூங்கியதில்லை. உதவும் மனப்பான்மை மிகவும் உடையவராவர். அவரின் நடை, உடை, செயல்பாடுகள் என ஒவ்வொன்றிலும் தனக்கென தனித்தன்மையுடையவராக இவர் இருந்தார். பிறமொழி கலவாது அவர் பேசிய தமிழ் அன்றைய காலத்தில் எனக்கு வியப்பாக இருந்தது.

பல்கலைக்கழகத் தமிழாசிரியர்கள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், நான் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளை முடித்தேன். அங்குதான் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு பரிணாமங்கள் தான் நான் பெற்றேன்.
அழகப்பா பல்கலைக்கழகம். காரைக்குடி

முனைவர் தெ.சொக்கலிங்கம் அவர்கள் எங்களுக்கு இலக்கண வகுப்புக்கு வந்து தொல்காப்பியம் எடுத்தார். இலக்கணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக நடத்தமுடியுமா என்று இவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலை முதல் வகுப்புக்கு எப்போது வந்தாலும் முதலில் பாடம் எடுக்கமாட்டார். முதல் பத்து நிமிடங்களுக்கு ஏதாவது ஒரு சிந்தனை குறித்துப் பகிர்ந்துகொள்வார். மாணவர்களிடமே கேட்பார் 

இன்று எதுதொடர்பாகப் பார்க்கலாம் என்று, அந்தப் பத்துநிமிடம் பாடம் தொடர்பாகவோ, வாழ்வியல் தொடர்பாகவோ, சமூகம் தொடர்பாகவே பேசுவார். பிறகுதான் பாடத்துக்குச் செல்வார். இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்ததாகும். இன்றும் எனது வகுப்புகளில் இந்த முறையை நான் மாணவர்களின் வரவேற்போடு பின்பற்றிவருகிறேன்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் சு.இராசாராம் அவர்கள் எனது தாய்மாமனாவார். நான் தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நெட்தேர்வில் தேர்வு பெற்றமைக்கும் இவரே எனக்கு வழிகாட்டியாக அமைந்தார். 

இவர் எனது வாழ்வியல் நெறியாளராவார். இவர் பாடம் எடுக்கும்போது பாடப்பொருள் தொடர்பான பல்வேறு சான்றாதாரங்களையும் தருவார். கரும்பலகையை முழுமையாகப் பயன்படுத்துவார். சங்கஇலக்கியத்தில் இவர் செய்த ஆய்வே எனக்கு நாமும் இவரைப் போல சங்கஇலக்கியத்தில் ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தது. இவரது ஆய்வுக்கட்டுரைகளும், பாடம் நடத்தும் முறையும், எனக்குப் பெரிய முன்மாதிரிகளாக அமைந்தன.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் எனது எம்பில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு நெறியாளராவார். சங்க இலக்கியம் குறித்தும், ஆய்வியல் அணுகுமுறை, நெறிமுறை, திட்பநுட்பமாக கட்டுரை வழங்குதல் குறித்தும் பல்வேறு நுட்பங்களையும் இவரே எனக்குப் புரியவைத்தார். 

பெரிய இலக்கண நூற்பாக்கள் பலவற்றையும் இவர் மனப்பாடமாகச் சொல்வார். இவர் எனக்குப் புறத்திணையியல் எடுத்தபோது நானும் இவரைப் போல நூற்பாக்களை மனப்பாடமாகச் சொல்லவேண்டும் என்று முயன்று பல நூற்பாக்களை மனப்பாடம் செய்தமை நினைவுக்கு வந்துசெல்கிறது.

இதுவரை சொன்ன தமிழாசிரியர் பெருமக்கள் யாவும் ஒவ்வொரு காலங்களிலும் என்னைச் செதுக்கியவர்களாவர். இவர்களின் மாணவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் நான் என்றும் பெருமிதம் கொள்வதுண்டு. 

எனது மாணவர் இவர் என்று அவர்கள் என்னைச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்திக்கொள்ள நாளும் முயன்றுவருகிறேன். 
கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கல்விக்காக கொடுத்த கொடை வள்ளல் திரு. அழகப்பச் செட்டியார். காரைக்குடி. 

ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகச் சொல்வதென்றால் எனக்கு நாளொன்று போதாது. இருந்தாலும் யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரைப் பற்றியும் சில நினைவுகளை மட்டும் பதிவுசெய்துள்ளேன்.

என் தமிழாசிரியர் பெருமக்களுக்கு இந்தக் கட்டுரை வழியாக என் பணிவான வணக்கங்களையும், அன்பையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!

முனைவர் இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்
வலை முகவரி - http://www.gunathamizh.com/
மேலும் வாசிக்க

12/15/12

என் தமிழாசிரியர் - வலைச்சரம் சீனா

10 கருத்துரைகள்
நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.


கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை.
மேலும் வாசிக்க

12/13/12

தமிழ்ச்செடி விழா - தினமணி

0 கருத்துரைகள்
நன்றி - தினமணி.

தமிழ்ச்செடி குழுவினர்.
மேலும் வாசிக்க

தமிழ்ச்செடி -என் தமிழாசிரியர் - நிகழ்காலத்தில் சிவா

3 கருத்துரைகள்


என் பள்ளிக்கூட வாழ்க்கையில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருந்தாலும் எனக்கு தமிழாசிரியாக இருந்து கோ. அங்கமுத்து என்ற ஆசிரியரை நினைத்துப் பார்க்கும் போது தற்போது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்க நியதிகளும் என் நினைவுக்கு வந்து போகின்றது. 

மேலும் வாசிக்க

12/12/12

இணையதளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா ?

0 கருத்துரைகள்

திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ச்செடி என்ற அமைப்பின் முதல் விழா கடந்த 9.12.2012 அன்று திருப்பூர் செண்பகம் மக்கள் சந்தை என்ற வணிக வளாகத்தில் காலை பத்து மணி அளவில் நடைபெற்றது. 

அன்று விழாவில் திருப்பூரைச் சேர்ந்தவரும், வெகுஜன பத்திரிக்கை உலகில் அறிந்த, இலக்கிய எழுத்தாளர்களின் வட்டத்தில் அதிக அறிமுகமான எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் அவர்களின் சிறப்புரையின் முழு வடிவம் இது. தமிழ்ச்செடியின் டிசம்பர் மாத விழாவின் சார்பாக இணையமும் தமிழும் என்று கொடுத்து இருந்தோம்.

மேலும் வாசிக்க

12/10/12

தமிழ்ச்செடி - முதல் விழா (9-12-2012)

16 கருத்துரைகள்

சென்ற ஞாயிறு அன்று தொழிற்களம் நிறுவனர் திரு.ஈஸ்வரன் சீனிவாசன் அவர்களையும், தொழிற்களம் சார்பாக மக்கள் சந்தை.காம் என்ற நிறுவனத்தை  செயலாக்கத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கும் திரு. அருண் அவர்களை நானும் தேவியர் இல்லம் ஜோதிஜியும் சந்தித்தோம்.
மேலும் வாசிக்க

12/8/12

தமிழ்ச்செடி மற்றும் தொழிற்களம் இணைந்து நடத்தும் பதிவர் பரிசளிப்பு விழா

4 கருத்துரைகள்


நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் தமிழை, நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த தமிழாசிரியர்கள் குறித்து நினைத்துப் பார்க்க உருவாக்கப்பட்டதே தமிழ்ச்செடியின் முதன்மையான நோக்கம். கல்வெட்டு தமிழ் முதல் இன்றைய கணினி தமிழ் வரைக்கும் கடந்து வந்த பாதையை ஆற அமர்ந்து ஆற்றங்கரையோரம் அமர்ந்து பேசும் சுகத்தினை தரத் தயாராக இருக்கின்றோம்.   

விரும்புவர்கள் வாருங்கள். உலகத்தமிழர்களிடம் கொண்டு சேர்ப்போம். 

நாள் 09.12.2012

நேரம் : காலை 10.00 முதல் 12 மணி வரை

இடம் : செண்பகம் மக்கள் சந்தை
காங்கேயம் சாலை, ராக்கியாபாளையம் பிரிவு, திருப்பூர்.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து :  தொழிற்களம் உறுப்பினர்கள்

விழா ஒருங்கிணைப்பு : திரு, அருண் (தொழிற்களம் தலைமை ஒருங்கிணைப்பாளர்)

வரவேற்புரை : திரு வீடு சுரேஷ்குமார்

தொடக்க உரை :  தொழிற்களம் நிறுவனர் திரு. ஈஸ்வரன் சீனிவாசன் அவர்கள்
                                    தலைப்பு  இனி நாம் செல்லப்போகும் பாதை

சிறப்புரை :  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 
                      தலைப்பு  இணையமும் தமிழும்

பரிசு வழங்குபவர் : தேவியர் இல்லம் ஜோதிஜி

பரிசு பெறுபவர் : திரு மணிவண்ணன் ( http://www.naamanivannan.in/ )
(நவம்பர் 2012 மாத தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வலைபதிவு)

ஏற்புரை :  திரு. மணிவண்ணன்.

நன்றியுரை :  இரவு வானம் சுரேஷ்.

அனைவரும் வருக, ஆதரவு தருக ..!


விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்ச்செடியின் கிளைகள்


1.  மணிவண்ணன்  - http://www.naamanivannan.in/

2.  ஆருர் மூனா செந்தில் - http://www.amsenthil.com/

3.  மெட்ராஸ் பவன் சிவா - www.madrasbhavan.com/

4.  உலக சினிமாரசிகன் பாஸ்கரன் கோவை - http://worldcinemafan.blogspot.in/

5.  நிகழ்காலத்தில்  சிவா திருப்பூர் - http://www.arivhedeivam.com/

6.  சசிமோகன்குமார் ஈரோடு - http://sasemkumar.blogspot.in/

7.  சம்பத்குமார் - http://www.tamilparents.com/

8.  வீடுசுரேஸ் - www.artveedu.com/

9.  இரவுவானம் சுரேஷ் - http://www.iravuvaanam.blogspot.com/

10.  ஜோதிஜி - http://deviyar-illam.blogspot.in/

11.  தொழிற்களம் - http://tk.makkalsanthai.com/

12. கோவை மு சரளா http://kovaimusaraladevi.blogspot.in/


ஆங்கிலம் என்பது நாம் அணிந்திருக்கும் கண்ணாடி போன்றது. ஆனால் நமது கண்கள் எப்போதுமே நமது தாய் மொழி தமிழ் தானே. 
மேலும் வாசிக்க

12/7/12

தமிழ்ச்செடி முதல் விழா அழைப்பிதழ் ..!

2 கருத்துரைகள்
ணையத்தில் தமிழில் எழுதும் எழுத்தாளர்களை, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்ச்செடி உருவாக்கப்பட்டது அதன் முதல் விதை வரும் ஞாயிறு அன்று ஊன்றப்படுகின்றது. எனவே அனைத்து பதிவுலக நண்பர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.


மேலும் வாசிக்க

12/5/12

எழுத்தறிவித்தவன் இறைவன் - என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்

7 கருத்துரைகள்


என் இனிய தமிழ் செடி உறவுகளே!  தன் தாய் மொழியை தன் உயிரைப்போலவே மதித்து தன் சந்ததிகளிடம் எவன் கொண்டு சேர்க்கிறானோ அவன் அந்த மொழி பேசும் மக்களின் மரியாதைக்கு உரியவன். நம் செடியில் இது வரை தமிழாசிரியர்களை பற்றி நண்பர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கம்.

என் பள்ளி பருவத்தில் 12 ஆம் வகுப்பு வரை பல தமிழ் ஆசிரியர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் பலவிதமான குணத்தில் இருந்தாலும் அவர்களின் தமிழ் மொழி திறமை என்னை பெரிதும் வியக்க வைத்துள்ளது. தமிழ் மொழி எனபது நம் மொழி மட்டுமில்லை நமது அடையாளம்  என்பதை எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் இவர்களே. முதலில் என் ஆரம்ப பள்ளி ஆசிரியரை பற்றி பார்ப்போம் :

தார்ச் சாலை  வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் பிறந்த நான் பள்ளி செல்ல இரண்டு கிலோ மீட்டர் நடந்து  பக்கத்துக்கு ஊரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்த பள்ளியில் நான் சேர்ந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. என் தந்தையார் என்னை மிதி வண்டியில் அமர வைத்து என்னை அழைத்துச் செல்வார். என்னை போலவே இன்னும் பல சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இருந்தனர், அவர்களில் சிலர் அழுது  கொண்டும் இருந்தனர். அந்த கூட்டத்தைப் பார்த்து எனக்கும் பயம் வந்தது, உடனே நான் “அப்பா வீட்டுக்கு போலாம்...!” என்று நச்சரிக்க தொடங்கினேன் காரணம் ஆசிரியர் என்பவர் அடிப்பார் என்ற காரணம். 

அப்போதுதான் நான் அவரை பார்த்தேன் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் அமர்ந்திருந்தார். சிகப்பு மற்றும் நீல நிறப் பேனாக்களை அவர் உபயோகித்து ஒரு மஞ்சள் நிற தாளில் அன்று சேர்ந்த, சேர வந்திருந்த குழந்தைகளின் பெயர்களை எழுதி கொண்டு இருந்தார். அவர்தான் வாத்தியார் என்று என் அப்பா சொன்னார். கூடுதலாக “நீ...! அழாமல் இருந்தால் அவர் மிட்டாய் தருவார்....” என்றும் கூறினார். 

நான் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு அமைதியாகி நின்று அவரின் செய்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு பெற்றோரையும் அழைத்தார், குழந்தைகளின் பெயரைக் கேட்டு, அந்த குழந்தைகளின் கைகளை தூக்கி தலை மேல் போட்டு குறுக்கிலிருந்து காதை தொடச் சொன்னார் அங்கிருந்த அத்தனைக் குழந்தைகளும் ஒவ்வொருவராக செய்து முடித்ததும் பட்டியலில் சேர்த்துக் கொண்டே வந்தார். 


என் முறை வந்தது...! என் அப்பா ஆசிரியரின் பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்,  நான் என் அப்பாவின் மடியில் அமர்ந்தேன்.

“பையன் பெயர் என்ன? என்றார்.” 

என் அப்பா “சசிக்குமார்” என்கிறார் அவர் அந்த தாளில் என் பெயரை எழுதி விட்டு என்னையும் காதைத் தொடச் சொன்னார். எனக்கு கொஞ்சம் கை எட்டவில்லை...! இருந்தாலும் என் பெயரை எழுதி விட்டு சரி நீங்கள் விட்டு விட்டுச் செல்லுங்கள் என்றார். என் அப்பாவும் கிளம்ப நான் இடம் மறந்து அழ ஆரம்பித்தேன். 

உடனே அந்த வாத்தியார் எனக்கு ஒரு மிட்டாயைக் கொடுத்து “டேய் அழக் கூடாது...! அழுதா! எப்படி பெரிய ஆளா ஆவது?” என்று சொல்லி விட்டு என்னையும் என் போன்ற சில குழந்தைகளையும் அழைத்து அடுத்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே நிறைய குழந்தைகள் இருந்தனர். அவர்களோடு நானும் தரையில் அமர்ந்தேன். 

இங்கிருந்துதான் தொடங்குகிறது என் பள்ளி வாழ்க்கை. ஆசிரியர்களின் அறிமுகமும் இப்போது தான் தொடங்கியது. அழும் குழந்தைகளுக்க்காக அவர் பல சேஷ்டைகள் செய்து காட்ட நானும் என் அழுகை மறந்து சிரித்தேன்.  அந்த ஆசிரியரின் பெயர் ராஜ மாணிக்கம் பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமான நபராகவும் இருந்தார். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டைதான் அணிவார். அவரின் கம்பீரம் இன்றும் என் நினைவில் உள்ளது. அவர்தான் எனக்கு என் விரல் பிடித்து அ ..ஆ இ ஈ  எழுதி பழக வைத்தார். 1 2 3  என்று எண்களை அறிமுகம் செய்து வைத்தார். உயிர் மெய் எழுத்துக்களை அறிமுகம் செய்து என் கல்வி என்ற உயிரின் தீபத்தை ஏற்றினார். நிறைய கதைகள் சொல்லி எனக்கும் என் போன்ற சிறார்களுக்கும் பள்ளிக்கூடம் பற்றிய பயத்தை போக்கியவரும் அவரே. 

என் வாழ்வின் ஒரு புதிய கதவு அன்று தான் திறந்தது. இன்று வரை என் கையெழுத்து அழகாக உள்ளது என்று மற்றவர்கள் என்னிடம் சொல்லும் போது அந்த புகழுக்கு சொந்தகாரர் அய்யா ராஜமாணிக்கம் அவர்கள்தான். அவரின் கை எழுத்து அவ்வளவு பிரமாதமாக இருக்கும், சிறு அடித்தல் திருத்தல் கூட இருக்காது கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். மணி..... மணியாக இருக்கும், அவர் என் கை பிடித்து இரட்டைக் கோடு போட்ட, நான்கு கோடு போட்ட தாள்களில் எழுதப் பழக்கியது தான் முக்கியக் காரணமாக இருந்தது. 

மூன்றாம் வகுப்பு வரை அவரே என் வகுப்பின் ஆசிரியராக இருந்தார்.  எனக்கு மட்டுமல்ல, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் அவர் மேல் அதிக அளவு பாசமாக இருந்தனர். அன்புடன் சேர்த்த பண்புடனும், கண்டிப்புடனும் பாடங்களை நடத்துவார். வகுப்பறையில் குழந்தைகள் திடீரென்று மலம் சிறுநீர் போய் விட்டாலும் முகத்தை சுழிக்காமல் அவர்களுக்கு ஆசிரியரே உதவி செய்து சுத்தம் செய்வார். 


விளையாட்டு மற்றும் உடைகளை நேர்த்தியாக அணிதல் மற்றும் பள்ளியினைச் சுத்தப் படுத்துதல் போன்றவற்றையும் கற்றுத் தந்தார். ஓவியம் வரைவார், பாடல்கள் பாடுவார், விடுகதைகள் போடுவார், இப்படி  சிறார்களுக்குப் பிடித்த மாதிரி பாடங்கள் எடுப்பது மட்டுமில்லாமல் முடிந்தவரைக்கும் மாணவர்களைப் பாராட்டு மழையில் நனைய வைப்பார். அதனாலேயே இன்னும் என் போன்ற மாணவர்களின் மனதில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் இப்போது எந்த பள்ளியில் விரல் பிடித்து எழுத கற்றுத் தருகின்றார்கள் ?

அவர் என் பக்கத்துக்கு ஊர்தான்! அவருக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு ஆண்கள், ஒரு பெண் முறையே மூவரையும் நன்கு படிக்க வைத்து ஒருவரை போலீஸ் அதிகாரியாகவும், இன்னொருவரை எல்.ஐ.சி யில் அதிகாரி ஆகி பெண் பிள்ளையை ஆசிரியராகவும் உருவாக்கியுள்ளார். அவர் ஓய்வு பெற்ற பின்னும் ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார். இப்போது எடுப்பது இல்லை. இப்போது அவர் ரீ சார்ஜ் செய்யும் கடை வைத்து கவனித்து வருகிறார், எப்படியாவது அவரை வாரத்தில் மூன்று முறை சந்தித்து விடுவேன் அவருக்கு உடல் நலமில்லாமல் போனால் என்னைத்தான் அழைப்பர், நான் சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். இன்று வரையிலும் அவர் எனக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார் நிறைய படி எழுது என்று பல ஆலோசனைகளையும் தருகின்றார். 

நான் எனது தம்பி எனது தங்கை ஆகியோர் அவரிடம்தான் படித்தோம், ஆனால் அவரை போலவே ஆசிரியர் ஆகவேண்டும் என்று நானும் எனது தம்பியும் நினைத்தது இல்லை. என் தங்கை மட்டும் அவரை போலவே ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டார். வெற்றியும் பெற்று விட்டார். 

இதை அவர் என்னிடம் அடிக்கடி சொல்லி சந்தோசப் படுவார்! இப்படி பட்ட கொடுப்பினை இப்போது வரும் தலைமுறைக்கு கிடைப்பது இல்லை, காரணம் நமது கல்வி முறை ஆரம்ப பள்ளி தமிழில் படித்தால் கேவலம் என்ற மனப்பான்மை பெருகிவிட்டது நம் மக்களிடம், ஆகவே என் கிராமத்தில் கூட பொருளாதார ரீதியாக துன்பப் பட்டு ஆங்கில வழிப் பள்ளிக்குதான் அனுப்புகின்றனர் ..ரொம்பவும் வேதனைப் படக் கூடிய விசயமாக தெரிகின்றது எனக்கு.

அவ்வளவு சிறப்பான ஆசிரியர் என் ஆரம்ப பள்ளியில் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இன்று வரை என் படிப்பின் சிறப்புக்கு அவரே காரணம் அவரின்றி நன்கு அமைந்திருக்காது என் கல்வி வாழ்க்கை. “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று சொல்லுவார்கள் எனக்கும் என்போன்ற என் சக மாணவர்களுக்கும் அவர் தான் என்றுமே இறைவன்! அவரால் விரல் பிடித்து எழுத பழகியவர்கள்தான் இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும், உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். அவரின் மாணவன் என்பதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்கிறேன் ஐயா ராஜமாணிக்கம் எனக்கு இறைவனே

நம் தாய் மொழியில் படிப்பது அவ்வளவு கேவலமாய் போய் விட்டதா ?ஆங்கிலம் வேண்டும்தான் அதற்காக நம் உயிர் போன்ற தமிழை தூக்கி எரிந்து கொலை செய்வதா? நாமே நம் மொழியினை மதிக்காமல் போனால் வேறு யார் மதிப்பார்கள் ? என்கின்ற வினா என் மனதில் எழுகின்றது அனைவருக்கும் இப்படி பட்ட ஆசிரியர்கள் வாய்க்க வேண்டும்! வெறும்படிப்பினை மட்டும் சொல்லித்தருகிற கல்வியாளர்கள் வேண்டாம்! படிப்புடன் நாம் வாழத் தேவையான அனைத்து விசயங்களையும் சொல்லி தருகிறவர்கள் வேண்டும் என்பதே என் கனவும், ஆசையும்!

வெறும் நூறு சதவிகித தேர்ச்சிக்கு மட்டும் தான் பள்ளிகளா? மாணவர்கள் எந்திரங்களா? நாம் தெரிந்தே வரும் தலைமுறைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை! இயற்கை வளங்களைக் காக்க மறந்தோம், நீலம், தானே போன்ற புயல்களை சந்திக்கின்றோம். பல பேரிடர்பாடுகளை சந்திக்கின்றோம் அதைப் போலவே நம் தாய் மொழியையும் இழக்கப் போகின்றோம். சமூக சீர்கேட்டின் ஆதாரமாக இருக்கப் போகின்றது. மொழி என்பதன் அடித்தளத்தில் தான் கலாச்சாரம் உருவாகின்றது. வேறொரு மொழி நம்முடைய கலாச்சாரத்தின் கூறுகளை சொல்வதில்லை. நமது அடிப்படை வாழ்க்கை முறையே மாறிவிடும்.  அப்படித்தான் தற்போது மாறிக் கொண்டிருக்கின்றது.

குழந்தைகள் ஆங்கில மொழியில் படிக்க வைப்பது தவறில்லை.  ஆனால் வீட்டில் தாய்மொழியை கற்றுக் கொடுத்து பேச எழுத வைக்கலாம். ஆங்கில வழி பள்ளிகளில் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை நாம் தமிழர்கள்தானே? நம் மொழியை பேசுவதில் என்ன கேவலம் ? “தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” என்று பாடிய புரட்சி கவிஞர் இன்று இருந்தால் கொலைவாளினை எடுத்து நிறைய பேர்களின் தலைகளை சீவி இருப்பார்.

கல்வியில் மட்டுமில்லை! அனைத்து இடங்களிலும்...!  ஏன்? வங்கிகளில் தமிழில் ஒரு கடிதம் எழுதினாலே கேவலமாகப் பார்கின்றனர் தமிழர்களே! தமிழை நிராகரிக்கின்றனர். எனது முக நூல் கணக்கை நான் தமிழில் வைத்து இருப்பதாலேயே அதிக நண்பர்கள் எனது நட்பு கோரிக்கையை ஏற்க மறுக்கின்றனர். ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து எழுதி தங்கீலிஷ் என்ற புது மொழியை உருவாக்கி உள்ளனர். 

இது நம் மொழிக்கு செய்கின்ற துரோகம் இல்லையா...? இரண்டு மொழிகளையும் சேர்த்து தான் நாம் கேவலம் செய்கிறோமே! அப்படி எந்த விதத்தில் நம் மொழி குறைந்து போய்  விட்டது? தொழில் வாழ்க்கைக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் மட்டும் தான் இன்று உலகம் முழுக்க ஆங்கிலம் கோலோச்சுகின்றது. ஆனால் சம்பாதிப்பது வாழத்தானே? வாழ்க்கை மொழியென்பது நமக்கு தமிழ் தானே?  

மொழி எனபது நமது அடையாளம் அந்த அடையாளத்தை தொலைத்துவிட்டு நாம் எப்படி வாழ முடியும்? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்குகிறோம் வெறும் முழக்கத்தோடு நின்றுவிடுகிறோம் ..அதனாலேயே நம் தமிழை நாமே கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறோம் எத்தனை காவியங்கள்..காப்பியங்கள்  நம் அழகுத் தமிழில்..? 

தாயை பழிப்பதும் நம் தமிழை பழிப்பதும் ஒன்றுதான் தாயை பழித்தால் எவ்வளவு கோபம் வருகிறதோ...! அது போலவே தமிழை பழித்தாலும் பெரும் கோபம் வரவேண்டும் நண்பர்களே! 

தமிழ்செடிக்காக........
செல்வன்: சசிமோகன்குமார்

மேலும் வாசிக்க

12/3/12

குழந்தைகளிடத்தில் தமிழை வளர்ப்போம்!

6 கருத்துரைகள்

வணக்கம் நண்பர்களே!
நமது நாட்டில் சமூக பழக்க வழக்கங்களும் கலாசாரமும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நம்மை உயர்தர வாழ்க்கை முறைக்கு முன்னேற்றி (மாற்றி ) கொண்டுவரும் அந்நியநாட்டு(ஆங்கில) பழக்க வழக்கங்களும், கலாசாரமும் நமது பழம்பெரும் மொழியாம் தமிழ் மொழியைத் தரம் தாழ்த்திக்கொண்டுபோகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆம், தமிழில் ஆங்கில கலப்பில்லாமல் நம்மால் பேசமுடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். வாழும் தலைமுறையான நாமும் தமிழ்ச் சொற்கள் தெரிந்தாலும், ஆங்கில கலப்பில் பேசவே விரும்புகிறோம். ஏனெனில் நமது ஸ்டேட்டஸ் அதையே விரும்புகிறது. 

ஆனால், வளரும் தலைமுறையான இன்றைய குழந்தைகளும் ஆங்கில கலப்பில்தான் பேசுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம்தான் அவர்களை ஆங்கிலத்தைக் கட்டாய முதன்மைப் பாடமாகவும், மற்றொரு அந்நிய மொழியை (உம்: பிரெஞ்ச்) கட்டாய இரண்டாம் பாடமாகவும் கொண்டுள்ள பள்ளிகளில் சேர்த்துவிடுகிறோம். அங்கு இந்திய மொழிகள் விருப்பப் பாடமாக  உள்ளது. பெரியவர்களாக ஆனபின் அந்தக் குழந்தை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டி  நாம் ஹிந்தி மொழியை அவர்களுக்குத் தேர்வு செய்து தருகிறோம். இதனால், நமது தமிழ் மொழி அவர்களிடத்தில் வெறும் பெயரளவுக்கே உள்ளது.

நாம் அவர்களிடத்தில் வீட்டில் தமிழில் பேசினாலும், பள்ளிகளிலோ ஆங்கிலத்தில் பேசவே அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். தமிழில் பேசினால் தண்டனை எனவும் சில பள்ளிகளில் இருப்பதால் வேறு வழியில்லாமல் குழந்தைகள் தமிழை மறக்க நேரிடுகிறது. அக்குழந்தைகள் இவ்வாறு ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமாவதால், அவர்கள் வீட்டில் பெற்றோர்களிடத்தில் ஆங்கிலத்தில் பேசவே மறைமுகமாக உந்தப்படுகிறார்கள். வேறு வழியில்லாமல்  நாமளும் அவர்களிடத்தில் ஆங்கிலத்திலேயே பேசவேண்டி உள்ளது.

எனது உறவினர் குடும்பமாக அயல் நாட்டில் சுமார் இருபது வருடங்களுக்குமேல் வசித்துவருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தமிழை நமக்குச் சமமாகப் பேசுகிறார்கள். 'மாமா எப்படி இருக்கீங்க’ 'அத்தை எப்படி இருக்கீங்க’ என்றும் அழகாகத் தமிழில் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான். அவர்கள் குழந்தைகளிடத்தில் பேசும்போதும், அவர்களுக்குள் பேசும் போதும் தமிழில் பேசுகிறார்கள், எங்களை அக்குழந்தைகளிடத்தில் அறிமுகம் செய்யும்போதும் மாமா, அத்தை என்று தமிழிலேயே அறிமுகம் செய்கிறார்கள். இதனால், அவர்கள் தமிழ் மொழியினை அறிய வாய்ப்புக் கிடைக்கறது.
இதையே நம்மூரில் எடுத்துக்கொள்ளுங்களேன்,  ' hi, uncle how are you?' என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நாமும் அவர்களுக்கு , ' ya i'm fine' என ஆங்கிலத்தில் பதில் சொல்லியே பழகிவிட்டோம்.

எனவே,  குழந்தைகள்  தமிழை முடிந்தஅளவு பேசிப்பழக  நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள், திருக்குறள், ஆத்திச்சூடி புத்தகங்கள் என குழந்தைகளின் மனது ஏற்கும் அளவுக்குத் தமிழை அவர்களிடத்தில் உட்புகுத்தலாம். அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய தமிழ் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு சொல்லித்தரலாம்.

ஆங்கில கார்ட்டூன், பொம்மை படங்களைப் பார்க்கவிடாமல் தமிழில் வரும் கார்ட்டூன், பொம்மை படங்களை பார்க்கச் சொல்லலாம். சிறுவயதில் நாம் தமிழில் கதை கேட்டு வளர்ந்ததைப்போல, குழந்தைகளுக்கும் தமிழில் கதைகளைச் சொல்லலாம்.

குழந்தைகளின் வருங்காலத்தைக் கவனத்தில்கொண்டு அவர்கள் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக எடுத்தாலும், தமிழை இரண்டாம் முதன்மைப் பாடமாக எடுத்து அவர்கள் மூலம் தமிழை அழியவிடாமல் வளரச் செய்வது தமிழனான நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழ்செடிக்காக
மேலும் வாசிக்க
 

மேலே செல்