12/15/12

என் தமிழாசிரியர் - வலைச்சரம் சீனா


நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.


கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை.
வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். ஹைஜம்ப், லாங்ஜம்ப், சடுகுடு, கிட்டிப்புள், எனப் பல விளையாட்டுகள் விளையாடிய இடம்.

வீட்டின் முன்பக்க அறையில் ஒரு சிறு மளிகைக் கடை வைத்திருந்தோம். அது காய்கறிக் கடையோடு இணைந்த மளிகைக்கடை. வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 4 மணிக்கு நானும் என் தந்தையும் சைக்கிளில் சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து அனைத்துக் காய்கறிகளையும் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வருவோம். 

கீழ மாசி வீதியிலும் வீதி முழுவதும் உள்ள தேங்காய்க் கடைகள், பழக்கடைகள், அனைத்திலும் கொள்முதல் செய்து, புதூர் வரும் போது காலை 6 மணி ஆகிவிடும். காலையிலேயே தினந்தினம் புதுசு புதுசா காய்கறிகள் வியாபாரம் களை கட்டும். ஏழு ஏழரைக்கெல்லாம் முடிச்சிட்டு மளிகைக் கடையில் உக்காந்தா எட்டரை வரைக்கும் இருப்பேன். 

அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.

வீட்டிலே இருந்து நாங்க நண்பர்கள் புடை சூழ நடந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தேதேதேதே தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருக்கும் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்குச் செல்லும் வழி இரண்டு உண்டு. புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் கோயில் மெயின் ரோட்டிலேயே நடந்து ஐடிஐ, ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், தல்லாகுளம் என நடந்து செல்வதற்குள், வீடு, பள்ளி, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் என அத்தனை இடங்களைப் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும், பேசுவோம். 

பேசிப் பேசி, விவாதித்து, ஆமோதிக்கும் கட்சி, மறுக்கும் கட்சி எனப் பட்டி மன்றம் நடத்தி ( அதில் சில நண்பர்கள் பார்வையாளர்களே) - பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் அது.

அசை போட்டு ஆனந்திக்கும் நாட்கள். கவலைப் படுகின்ற சில நாட்களில் ஆறுதலுக்கு நட்பே கை கொடுக்கும். மேலும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள இரட்டைப் பிள்ளளயாரிடம் சொல்லி விட்டால் கவலைகள் பறந்து போகும் - மறந்து போகும். 

பள்ளிக்குச் சென்ற மற்ற வழி - வீட்டிற்குப் பின்புறம் இருந்த பெரிய கம்மாக்கரை வழியா நடந்து போனது. கம்மாயிலே இடுப்பளவு தண்ணி இருந்த காலத்திலே குளிக்கிறோம்னு சொல்லி கூத்தடிச்ச காலங்கள் உண்டு

தண்ணிக்குள்ளே வந்து கோமணத்தே உருவிட்டுப் போய்டுவானுங்க! காலைலே சுகமா கம்மாக் கரையிலே பசங்களோட அப்பிடியே வெளீயே போய்ட்டு கம்மாலெயெ காலைக் கழுவிட்டு வந்த சுகம் இப்போ பெரிய வீட்லே WC டாய்லெட்லே கிடைக்குறதா ??

தற்போதைய DRO காலனி, சர்வேயர் காலனி ன்னு கம்மா பூரா வீடுகளா மாறிடிச்சி. கம்மாக்கரையிலேயே நடந்து நத்தம் ரோட்டைப் பிடிச்சா - கலக்டர் பங்களா, ரிசர்வ் லைன், எஸ்பி பங்களா, பிடபுள்யூடி ஈஈ பங்களா, கெஸ்டவுசுன்னு பல பங்களாக்கள் கடந்து அவுட்போஸ்ட் வந்து மெயின் ரோட்லே வந்து சேருவோம்.  

அப்பல்லாம் ஏதாவது அதிக ஆசைப்பட்டு வீட்லே கேட்டா, அப்பா வந்து "பெரிய சேஷய்யன்னு மனசிலே நினைப்பா" ன்னு திட்டுவாங்க. யாரந்த சேஷய்யன்னு ரொம்ப நாள் தெரியாம இருந்திச்சி. அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).

சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு பசங்களெப் பிரிஞ்சு நாங்க ரெண்டு மூணு பேரு நத்தம் ரோட்லெந்து பிரிஞ்சு சொக்கிகுளம், பீபீகுளம், லேடி டோக் காலேஜ், ஓசிபிஎம் வழியா தல்லாகுளம் போவோம். சொக்கிகுளத்திலே வடமலையான் பங்களா, பிடிஆர் பங்களா, டிவிஎஸ் பங்களான்னு பெரீஈஈஈஈஈஈய வீடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவோம். பள்ளிக்கூடம் போனாப் போவோம் இல்லேன்னா தமுக்கம் மைதானம் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருப்போம். சாயந்திரம் அப்பிடியே வந்தோம்னா, பசங்க எல்லாம் காலைலேந்து காணோமேன்னு அலை பாஞ்சுகிட்டுருப்பானுங்க. அப்பிடி கெத்தா வந்து, சேந்து வீடு போவோம். திட்றவன் திட்டுவான். அழுவறவன் அழுவான். அப்புறம் பழம் விட்டுடுவோம். 

நண்பர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த - சிவானந்தம், பவானந்தம், நித்யானந்தம், பரமானந்தம் ஆகியோர் நல்ல நண்பர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும், மீன் வளத்துறையிலும், கனரா வங்கியிலுமாக பணிக்குச் சென்றவர்கள். நீண்ட காலமாக தொடர்பு விட்டுப் போய் விட்டது. மற்ற நண்பர்கள் மின்வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலுமாக பணிக்குச் சென்றார்கள்.

மூன்றாண்டு காலம் பள்ளி வாழ்க்கை இன்பமயமாகச் சென்றது. XIth standard வரை அங்கு படித்தேன். அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. அதற்கு முன்னால் சர்க்கியூட் ஹவுஸ் மட்டும் தான் இருந்தது.

பள்ளியில் தலைமையாசிரியராக அந்தக் காலத்தில் அமெரிக்கா சென்று வந்த திரு சுந்தர்ராஜ் இருந்தார். எங்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவார். பொறுமையின் திலகம். கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர்.

தமிழாசான்களாக, திரு நடராஜன், கோவிந்தன், அலங்காரம் என்னும் பெருமக்கள் கற்றுத்தந்த தமிழ்தான் இன்றைக்கும் சிறிதளவாவது தமிழ் பேச வைக்கிறது. திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) மறக்க முடியுமா - தமிழிலக்கணத்தை கரைத்துக் குடிக்க வைத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞான ஆசிரியர் திரு ஜான்சன் சுவாமிப் பிள்ளை. பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.

சக மாணவர்கள் அக்கம் பக்கம் பார்த்து அவனை எழுப்பி விடுவர். ஆசிரியரோ கவலைப் படாமல் தொடர்ந்து பாடம் நடத்துவார். சமூக இயல் ஆசிரியர் திரு Eddie. உடற் பயிற்சி ஆசிரியர் திரு டெய்லர். ஹிந்தி ஆசிரியர் திரு சீனிவாசன். 

அக்கால கட்டத்தில் தான் இந்தி எதிர்ப்பு பலமாக இருந்த காலம். காளிமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் கல்லூரிகளில் படித்த காலம் - சட்ட எரிப்பு நடத்திய காலம். பக்தவக்சலம் முதல்வராகவும் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகவும் இருந்த காலம். இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம். 

முதல் மந்திரியையும், பிரதம மந்திரியையும் எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

தமுக்கம் மைதானம், அடுத்துள்ள பூங்கா, காந்தி மியூசியம், ரேஸ்கோர்ஸ் மைதானம் இவை தான் எங்களது பொழுதுபோக்கும் இடங்கள். 

முழங்கால் வரை நீண்ட டிரவ்சர்( வளர்ற புள்ளே - நல்லாத் தையுங்க) - காமராஜர் மாதிரி முழங்கை வரை தொள தொள சட்டை - ஒரு கையில் பை நிறைய புத்தகங்கள் - நோட்டுகள் - எப்போதும் கசியும் ஒரு பவுண்டன் பேனா - ஜாமெட்ரி பாக்ஸ் .

இத்துடன் ஒரு பெரிய அலுமினிய / எவெர்சில்வர் தூக்குச் சட்டி. அதனுள் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என வகை வகையாக தினத்துக்கொன்று என பலவகை சாதங்கள் - உடன் துவையல் ஊறுகாய் வெஞ்சனம் என - படிக்குற புள்ளே - பாவம்னு - அம்மா ஆசை ஆசையாக கட்டிக்குடுக்கும் மதிய சாப்பாடு - மறுபடி சிறு பையனாக மாறி பள்ளி செல்ல வேண்டும்.

பள்ளியின் அருகிலேயே தமுக்கம் மைதானத்தின் சுற்றுச் சுவர் இருந்தது. ஏறிக் குதித்து சாப்பிட அங்கு செல்வோம் - அனைத்து தூக்குச் சட்டிகளும் திறக்கப்பட்டு கூட்டாஞ்சோறு உண்ணுவோம். வெள்ளைச் சாமி உதயணன் என்ற வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா 


10 கருத்துரைகள்:

முனைவர் இரா.குணசீலன் on 12/15/2012 said...

நினைத்துப் பார்த்தல் சுகமானது..

நிகழ்காலத்தில்... on 12/15/2012 said...

Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு//

அப்பா... தல சுத்துதே.:))

எழுத்துகளைப்படிக்கும்போதே சீனா அய்யா சின்ன வயதில் என்ன கொண்டாட்டமாய் இருந்திருப்பார் என்பது நினைவில் விரிகிறது.

மகிழ்ச்சி :))

Rathnavel Natarajan on 12/15/2012 said...

அருமையான பதிவு.
நன்றி ஐயா.

saidaiazeez.blogspot.in on 12/15/2012 said...

சீனா ஐயாவின் அனுபவம் அப்படியே பழைய மதுரையை கண்முன் நிருத்தியது.
இன்றைய மாணவர்கள் எத்தனைபேர் இப்படி நடக்கின்றனர்?
அல்லது பெற்றோர்கள்தான் தம் குழந்தைகளை இப்படி வளர்க்கின்றனர்?
அது ஒரு அழகிய நிலாக்காலம்...

ப.கந்தசாமி on 12/15/2012 said...

தேனை ரசித்தேன்.

சேலம் தேவா on 12/15/2012 said...

இப்போதுள்ள பரபரப்பான வாழ்க்கைசூழலில் பள்ளி வாழ்க்கையை நினைத்து ஏங்கவைக்கிறது இந்த பதிவு.

ஜோதிஜி on 12/15/2012 said...

தேனை ரசித்தேன் + குடித்தேன்

தி.தமிழ் இளங்கோ on 12/15/2012 said...

//பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் அது. //

யாராலும் மறக்கமுடியாத நாட்கள். அந்தநாட்களின் அருமையை இப்போதுதான் என்னாலும் உணரமுடிகிறது.

dheva on 12/16/2012 said...

துள்ளல் நிறைந்த மலரும் நினைவுகளை வாசித்தது மிகப்பெரிய அனுபவமாய் மனதில் பதிந்து விட்டது சீனா ஐயா...!

நிறைய நிறைய உங்கள் எழுத்து நடையில் வாசிக்க காத்திருக்கிறேன்...!

பகிர்ந்திருக்கும் தமிழ்ச் செடிக்கு வாழ்த்துகள்...!

ADMIN on 1/30/2013 said...

மலரும் நினைவுகள்

 

மேலே செல்