11/9/12

எனது தமிழாசிரியர்கள்

3 கருத்துரைகள்

நான் படித்த பள்ளிக்கூடம் தனியார் நிர்வாகத்தில் ஆனால் அரசு பள்ளிக்கூடமாக  சரஸ்வதி வித்யாசாலை என்ற பெயரில் இருந்தது. எட்டாம் வகுப்பு வரையிலும் இரு பாலரும் படிக்கும் பள்ளிக்கூடமாக இருந்தது. காரைக்குடி பகுதியில் உள்ள அத்தனை வீடுகளிலும் ஒரு கலைநயம் கலந்தே இருக்கும்.  பாரம்பரியம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தினாலும் கட்டிடக்கலை என்பது வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது என்பதாக இருக்கும்.  நான் படித்த பள்ளிக்கூடமும் வசதியாக தனியார் நிர்வாகத்தில் இருந்த காரணத்தால் ஒரு ஒழுங்குமுறையோடு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
 .

தமிழ்வழிக்கல்வி என்பதால் தமிழாசிரியர்கள் குறித்த அக்கறையோ ஆர்வமோ எதுவும் பெரிதாக தொடக்கத்தில் தெரியவில்லை. எல்லா ஆசிரியர்களுமே தமிழ் மூலமே பாடம் நடத்தியதால் அனைத்து ஆசிரியர்களுமே தமிழாசிரியர்களாவே எனக்குத் தெரிந்தார்கள்.  ஆனாலும் எட்டாம் வகுப்பு வரையிலும் படித்த பாடங்களில் மற்ற பாடங்களை விட வரலாறு, தமிழில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற காரணத்தை இப்போது யோசிக்க முடிகின்றது.  முக்கிய காரணம் விருப்பம் என்பதை விட கதையாக இருந்ததே காரணமாக இருக்கலாம்.  மனப்பாட செய்யுள், தொடர்ச்சியான கட்டுரை என்று இரு பக்கமும் அழகான கையெழுத்துக்கு உதவியாக இருந்தது.

ஆனால் எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பு அருகே உள்ளே மற்றொரு பள்ளிக்குச் சென்றேன். அங்கே ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்பு வரை இருந்தது.  அங்கே தான் முதன் முதலாக தமிழாசிரியர் அண்ணாமலை என்பவர் அறிமுகமானார்.  குட்டையாக, மடித்து கட்டிய வேட்டியோடு பேரூந்தில் இருந்து நடந்து வரும் போது பக்கவாட்டில் ஒதுங்கி சென்றது இப்போது நினைவுக்கு வருகின்றது.  அவர் வாய் ஏதோவொரு பாக்கை எப்போதும் மென்று கொண்டேயிருக்கும்.  ஆனால் வகுப்பிற்குள் நுழைந்து விட்டால் கெடுபிடியாக இருப்பார்.  பாடங்களை தெளிவாக நடத்திய போதும் பெரிதான ஈர்ப்பு உருவாகவில்லை.  அவர் எதிர்பார்க்கும் மதிப்பெணகளை பெற்று விடுவதால் அவர் வகுப்பு எனக்கு எப்போதும் இயல்பானதாகவே இருந்தது.

ஆனால் பதினோராம் வகுப்பில் அறிமுகமான மீனவன் என்ற புனைப்பெயரில் இருந்த மீனாட்சி சுந்தரம் என்ற ஆசிரியர் தான் தமிழ் மொழியை ராகமாக, கவிதையாக, கட்டுரையாக, புனைவாக, சுருக்கமாக என்று பாடத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றார். இயல்பாக வகுப்பிற்குள் நுழைவார்.  நாற்காலியில் அமர்ந்து விட்டு ஒரு கால் மேல் மற்றொரு காலை போட்டு விட்டு கொண்டு வந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தை திருப்பி பார்த்து விட்டு அப்படியே மூடி வைத்து விட்டு பாடத்தை தொடங்குவார்.

வேறொரு உலகம் எங்களுக்கு அறிமுகமாகும். 

தமிழ் மொழியின் வீச்சு, ஆழம், அகலம் என்று அப்போது தான் எனது வாழ்வில் அறிமுகம் ஆனது. இரண்டு வருடங்களும் கற்ற அந்த தமிழ்மொழி இன்று வரையிலும் ஏதோவொரு வகையில் உதவிக் கொண்டேயிருக்கின்றது.  திரைப்படங்களுக்கு பாடல் எழுத முயற்சித்தார்.  சில படங்களுக்கு எழுதி விட்டு வந்ததாக அப்போது எங்களிடம் சொன்னார்.  மணிமேகலை காப்பியத்தின் தொடர்ச்சியாக மற்றொரு காப்பியத்தை உருவாக்கினார்.  பல இடங்களுக்கு ஆய்வுக்குச் சென்றது.

தினந்தோறும் காரைக்குடியிலிருந்து தான் எங்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் காலமாற்றத்தில் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் ஓய்வு பெற்று தற்போது ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


இரண்டு முறை சந்திக்க முயற்சித்து தோற்றுப் போனேன். அவரிடம் படித்த பழைய மாணவர்களுக்கே அவர் குறித்த நினைவில்லை. 

உள்ளூரில் இருப்பவர்களுக்கே அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை என்ற போது தான் தமிழ் என்பது வெறுமனே படிக்கும் போது மதிப்பெண் வாங்க மட்டுமே என்ற எதார்த்தம் எனக்குள் உரைத்தது.


ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்
மேலும் வாசிக்க

11/6/12

ஜெயகாந்தன்

0 கருத்துரைகள்


தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் சாதனையாளரும். ஞானபீட பரிசு பெற்றவருமான ஜெயகாந்தன். இலக்கியம்,அரசியல்,பத்திரிக்கை,சினிமா என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர்.

1934-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் மஞ்சக்குப்பத்தில் பிறந்த இவர், தனது பன்னிரண்டு வய
தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்ப்பு கொண்டு, அதன் ஊழியராக பணியாற்றத் துவங்கி அங்கிருந்து ஒரு போராளியாக உருவானார்.

புதுமைப்பித்தனையும், பாரதியையும் தன் ஆதர்சமாக கொண்டு எழுதத் துவங்கிய ஜெயகாந்தன்,1950 முதல் சரஸ்வதி இதழிலும், ஆனந்த விகடனிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.

இவரது கதைகள் அடிநிலை மக்களின் வாழ்வை உலகறியச் செய்தன. கற்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுமரபு என்ற பெயரில் அடக்கி வைக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக ஜெயகாந்தன் உரத்த குரல் கொடுத்தார்.

அரசியல் சீரழிவுகளையும், சமூக பிரச்சனைகளையும் கூர்ந்து அவதானித்து இவர் எழுதிய கட்டுரைகள் இன்றைக்கும் விவாதப் பொருளாக இருக்கின்றன.

'சிலநேரங்களில் சில மனிதர்கள்', 'கங்கை எங்கே போகின்றாள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்', 'பாரிஸ்க்குப் போ', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', 'சுந்தர காண்டம்' இவரது முக்கிய நாவல்கள். இவரது சிறுகதைகளும் முழுத்தொகுப்பாக 'ஜெயகாந்தன் சிறுகதைகள்' என்று வெளியாகி உள்ளன. இது போலவே குறுநாவல்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

சாகித்திய அகடாமி விருது, ராஜராஜன் விருது, நேரு விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர் இவரது படைப்புகள் ஆங்கிலம், செக், ருஷ்யன், பிரெஞ்ச், உக்ரேனியன், உள்ளிட்ட அயல் மொழிகளிலும் இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

நன்றி : எஸ். இராமகிருஷ்ணன்
மேலும் வாசிக்க

11/5/12

மோகமுள்-தி.ஜானகிராமன்

0 கருத்துரைகள்

 
மோகமுள்
மோகமுள்
தி. ஜானகிராமன்
 வெளியீடு:  ஐந்திணை பதிப்பகம்,  பக்கம்: 688,  விலை: ரூ. 300/-
Dial For Books:  94459 01234, 9445 97 97 97
....என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.... - .....இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது.
மோகமுள் பிறந்த கதை பற்றி தி.ஜா. (நன்றி: சொல்வனம்)
 மோகமுள் நாவல் பற்றி சுசிலா ராமசுப்ரமணியன் அவர்களின் விமர்சனம்:
மோகமுள் - இந்த வித்யாசமான தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. கதையின் நாயகன் பாபு. சற்றே மரபு மீறிய காதலாய் தன்னைவிட மூத்தவளான யமுனாவின் மீது அவன் கொள்ளும் மோகம்; அந்த மோகம் இசையுலகின் உயர்ந்த இடத்தை அவன் அடையும் லட்சியத்திற்கும் அவனுக்கும் இடையில் நின்று நிரடும் நிரடல், இவர்களைச் சுற்றி பலப்பல கதாபாத்திரங்கள் என்று சுமார் 700 பக்கப் புதினம். முன்னூறு அல்லது ஐநூறு வார்த்தைகளில் இந்தப் புத்தகத்திற்கு அறிமுகமோ அல்லது விமர்சனமோ எழுதித் தள்ளுதல் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.
பாபநாசத்தைச் சேர்ந்தவன் நம் நாயகன் பாபு. சங்கீதத்தில் அதீத ஆர்வம் கொண்டவன். அவனைக் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று அந்த ஆர்வத்தை வளர்க்கும் அப்பா. பாபுவின் சகோதரியின் தோழியான கதையின் நாயகி யமுனா, பாபுவுக்கு உயிர் நண்பனாக ராஜம்.
வயதான மனிதர் ஒருத்தரை மணந்த பக்கத்து வீட்டு இளம்பெண் ஒருத்தி, அவள் மீதான ஈர்ப்பு, அவள் மரணம், யமுனாவின் தந்தையின் மரணம், இந்த நிகழ்வுகள் சார்ந்த பாபுவின் மன உளைச்சல்கள், தடுமாற்றம் என்று கதை பயணிக்கிறது. பாபுவின் சங்கீத ஞானம் குடத்திலிட்ட விளக்கு ஆகிவிடக்கூடாது என்று ரங்கண்ணாவிடம் இசை பயில சேர்த்துவிடுகிறான் ராஜம். அதன்பின் பாபு மேல்படிப்பிற்கு சென்னை வருவது, யமுனா மீதான ஈர்ப்பு, அவன் சங்கீதத்தில் அடுத்த அடுத்த படிகளை எடுப்பது, அதற்கு வரும் சங்கடங்கள், சாதனைகள் என்றெல்லாம் பயணிக்கிறது கதை. அவன் நெஞ்சை நெருடிக் கொண்டிருந்த முள் என்னவானது, அவன் சங்கீத உலகில் என்னவாகிறான் என்பதே கதையின் முடிவு.
தஞ்சை பாஷையை தி.ஜா.வை விட்டால் யார் இத்தனை அருமையாய் எழுத்தில் கையாள்வார்? கதை படிக்கையில் நாம் கும்பகோணத்திலேயே வாசம் செய்கிறார்போல் ஓர் உணர்வு. கும்பகோணம் வீடும், அதன் முன்னே ஓடும் காவிரியாறும், அதன் சிலுசிலுப்பும், அதில் குளிக்கும் அனுபவமும்  பாபுவுக்கு மாத்திரமல்ல, ஏதோ நாமே காவிரியில் முங்கிக் குளித்த சந்தோஷம் ஏற்படுகிறது நமக்கு.
நாவலின் அடிநாதமே சங்கீதம்தான். நம் நாயகனின் மூச்சுக்காற்றாகவும் அதுவே இருப்பதால் ரங்கண்ணாவின் சங்கீதமும், பூனாவிலிருந்து வரும் பாடகர்களின் சங்கீதமும் என பாபு மாத்திரமல்ல அவனுடன் சேர்ந்து நாமும் சங்கீதத்தில் திளைக்க ஏதுவாய் இருக்கிறது, திஜா’வின் எழுத்து வாயிலாக.
சங்கீதத்தைச் செவியின் துணை கொண்டுதான் ரசிக்கவேணும். எழுத்தில் செய்யும் விவரணைகள் வெறும் எழுத்துக்களேயன்றி ஒலியல்லவே? ஆனால், தி.ஜா.வின் எழுத்துக்களில் இசை குறித்து வாசிக்கையில் நாம் ஏதோ அந்த இசையிலேயே  திளைத்து மகிழ்வதாய்த் தோன்றுகிறது. அதுதான் அவர் எழுத்தின் சிறப்போ?
கதாபாத்திரங்கள் வேடங்களைத் தாங்கிக் கொண்டு அதீத குணாதிசயங்களையெல்லாம் கொள்ளாமல் அவரவர்களாகவே இயல்பாய் வளைய வருகிறார்கள் என்பது மோகமுள்ளின் சிறப்பு.
பொதுவாக நாவல்களில் / சினிமாக்களில் - “இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவது அல்ல - என்று குறிப்பிடுவார்கள். ஆனால், மோகமுள் படிக்கையில் அந்தக் கதாபாத்திரங்களுடனும், சங்கீதத்திலும் திளைத்துக் காவிரியில் குளித்து அவர்கள் சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டதைப் போன்றே தோன்றுகிறது என்றால் அது நிச்சயம் மிகையில்லை. அதுவே இந்தப் புத்தகத்தை மறுபடி மறுபடி பலமுறைகள் என்னைப் படிக்க வைக்கும் காரணமாகவும் இருக்கிறது.
நன்றி: OMNIBUS
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-394-3.html
போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97
மேலும் வாசிக்க

தமிழாசிரியர் சு.கிருட்டிணராசு

5 கருத்துரைகள்

சதுரமான மூக்குக் கண்ணாடி, சுருட்டை முடி, நல்ல சிகப்பு நிறம், வாயில் எப்பொழுதும் மெல்லும் சீவல், வெற்றிலை, துப்பைப்பூ மாதிரிச் சட்டை, வேட்டி, சன்னலில் வெற்றிலையை துப்பி விட்டு கையில் புத்தகமும் இருக்காது நேற்று நடத்தியது என்னவென்று தன் கூர்மையான ஞாபக சக்தியால் உணர்ந்து ஒரு மணி நேரம் மாணவர்களை மகுடிக்கு மயங்கிய சர்ப்பங்களாய் ஆக்கிவிடும் வல்லமைப் படைத்த தமிழாசிரியர் ஐயாச் சு.கிருட்டிணராசு. 

எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழாசிரியர்கள்தான் நம் உணர்வைத் தொடுபவர்கள், நம்முடைய முதல் சிந்தனையை முனை நசுக்கித் திரிக் கொளுத்தி நம்மிடமுள்ள இலக்கியச் சிந்தனை, புனைவுத்திறன், ஆகியவற்றை குன்றிலிட்ட விளக்காய் வெளிக் கொணர்வது தமிழ்ப் பாடம்தான். வரலாறு நடந்த கதைச் சொல்வது, அறிவியல் கண்டுபிடிப்பைச் சொல்வது, கணக்கு தொழில் முறையைச் சொல்வது, ஆங்கிலம் பிற மொழியறிவைத் தருவது. பெரும்பாலான தமிழ் வழியில் கசப்பைத் தருவது, ஆனால் தமிழ் மட்டுமே உணர்வைத் தருவது இது நமக்கு மட்டுமல்ல அனைத்து மொழியினருக்கும்தான். 

என்னதான் பிற மொழியில் தேர்ச்சிப் பெற்றாலும், ஆந்தை மயில் போல் அகவும் முடியாது! குயில் போல் மயில் பாடவும் முடியாது! கவிதை, கட்டுரை, கதைகள் நம் தாய்மொழியில் எழுதுவது போல் வேற்று மொழியில் எழுதினால் உணர்வைத் தொடுமா என்பது ஜயமே! 

தாய்ப்பாலைக் கடமைக்காக புட்டியில் புகட்டாமல் முலைப்பால் புகட்டும் தாய் போல் தான் தமிழாசிரியர்களும், எனக்கு ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை சு.கி அவர்கள்தான் எனக்கு தமிழாசிரியர், அவர் திருக்குறள் பாடம் எடுக்கும் போது குறளுக்கு ஒரு கதைச் சொல்வார் அந்தக்கதை அனேகமாக ஹாஸ்யக் கதைகளாக இருக்கும் சும்மா கிடையாது வயிற்று வலியில் துடிக்க வைத்து விடுவார். வெறும் பாடப்புத்தகத்தில் உள்ளது மட்டுமில்லாது பல கதைகளைப் படித்து மாணவர்களுக்காக தானும் ஒரு மாணவனாக தேடல் உள்ளவர்களே சிறந்த ஆசிரியர்கள். அந்த வகையில் அவர் சிறந்த ஆசிரியர் என்பதை நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இலக்கிய புத்தகங்களே சாட்சி! ஓய்வு நேரத்தில் அவர் படித்துக் கொண்டிருக்கும் பல புத்தகங்களை நான் இரவல் வாங்கிச் சென்று படிப்பதுன்டு. பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒரு சக நண்பனைப் போல...! சிலதைப் சிலாகித்துப் படிக்கச் சொல்வார். 

கதைச் சொல்லும் பொழுது அதன் காதாபாத்திரங்களைப் போல் நடிப்பார் ஒரு நாடகமே அங்கே நடக்கும், குழந்தைப் போல் பேசுவார் முதியவர் போல் பேசுவார், அடிப்பது மிரட்டுவது எதுவுமே இருக்காது அவரிடத்தில் இளம் வயதில் பசுமரத்து ஆணி போல் நம் மனதில் பதியவைக்கும் வித்தையறிந்தவர். 

இது போன்ற ஆசிரியர்களை இப்பொழுது பார்ப்பது மிகவும் அரிது இன்னமும் சில நேரங்களில் மகனுடைய பள்ளிக்குச் செல்லும் பொழுது, வகுப்பறையை ஏக்கத்துடன் பார்த்து நாம் மீண்டும் பாலகனாக மாறிச் சு.கி அவர்களின் வகுப்பறையில் அமர்ந்து இருக்க மாட்டோமா....! என் ஏங்க வைத்தவர் ஜய்யாச் சு.கி.அவர்கள். சாட்டை திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் பாத்திரம் ஒரு மிகைபடுத்தப்பட்ட சினிமா என்றாலும் அவரைப் போன்ற ஆசிரியர்களுக்காக ஏங்கும் உள்ளங்கள் நிறைய இருக்கின்றன என்பது உண்மைதான்....!


தமிழ்ச் செடிக்காக.....
வீடு சுரேஸ்குமார்
மேலும் வாசிக்க
 

மேலே செல்