11/9/12

எனது தமிழாசிரியர்கள்நான் படித்த பள்ளிக்கூடம் தனியார் நிர்வாகத்தில் ஆனால் அரசு பள்ளிக்கூடமாக  சரஸ்வதி வித்யாசாலை என்ற பெயரில் இருந்தது. எட்டாம் வகுப்பு வரையிலும் இரு பாலரும் படிக்கும் பள்ளிக்கூடமாக இருந்தது. காரைக்குடி பகுதியில் உள்ள அத்தனை வீடுகளிலும் ஒரு கலைநயம் கலந்தே இருக்கும்.  பாரம்பரியம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தினாலும் கட்டிடக்கலை என்பது வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது என்பதாக இருக்கும்.  நான் படித்த பள்ளிக்கூடமும் வசதியாக தனியார் நிர்வாகத்தில் இருந்த காரணத்தால் ஒரு ஒழுங்குமுறையோடு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
 .

தமிழ்வழிக்கல்வி என்பதால் தமிழாசிரியர்கள் குறித்த அக்கறையோ ஆர்வமோ எதுவும் பெரிதாக தொடக்கத்தில் தெரியவில்லை. எல்லா ஆசிரியர்களுமே தமிழ் மூலமே பாடம் நடத்தியதால் அனைத்து ஆசிரியர்களுமே தமிழாசிரியர்களாவே எனக்குத் தெரிந்தார்கள்.  ஆனாலும் எட்டாம் வகுப்பு வரையிலும் படித்த பாடங்களில் மற்ற பாடங்களை விட வரலாறு, தமிழில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற காரணத்தை இப்போது யோசிக்க முடிகின்றது.  முக்கிய காரணம் விருப்பம் என்பதை விட கதையாக இருந்ததே காரணமாக இருக்கலாம்.  மனப்பாட செய்யுள், தொடர்ச்சியான கட்டுரை என்று இரு பக்கமும் அழகான கையெழுத்துக்கு உதவியாக இருந்தது.

ஆனால் எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பு அருகே உள்ளே மற்றொரு பள்ளிக்குச் சென்றேன். அங்கே ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்பு வரை இருந்தது.  அங்கே தான் முதன் முதலாக தமிழாசிரியர் அண்ணாமலை என்பவர் அறிமுகமானார்.  குட்டையாக, மடித்து கட்டிய வேட்டியோடு பேரூந்தில் இருந்து நடந்து வரும் போது பக்கவாட்டில் ஒதுங்கி சென்றது இப்போது நினைவுக்கு வருகின்றது.  அவர் வாய் ஏதோவொரு பாக்கை எப்போதும் மென்று கொண்டேயிருக்கும்.  ஆனால் வகுப்பிற்குள் நுழைந்து விட்டால் கெடுபிடியாக இருப்பார்.  பாடங்களை தெளிவாக நடத்திய போதும் பெரிதான ஈர்ப்பு உருவாகவில்லை.  அவர் எதிர்பார்க்கும் மதிப்பெணகளை பெற்று விடுவதால் அவர் வகுப்பு எனக்கு எப்போதும் இயல்பானதாகவே இருந்தது.

ஆனால் பதினோராம் வகுப்பில் அறிமுகமான மீனவன் என்ற புனைப்பெயரில் இருந்த மீனாட்சி சுந்தரம் என்ற ஆசிரியர் தான் தமிழ் மொழியை ராகமாக, கவிதையாக, கட்டுரையாக, புனைவாக, சுருக்கமாக என்று பாடத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றார். இயல்பாக வகுப்பிற்குள் நுழைவார்.  நாற்காலியில் அமர்ந்து விட்டு ஒரு கால் மேல் மற்றொரு காலை போட்டு விட்டு கொண்டு வந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தை திருப்பி பார்த்து விட்டு அப்படியே மூடி வைத்து விட்டு பாடத்தை தொடங்குவார்.

வேறொரு உலகம் எங்களுக்கு அறிமுகமாகும். 

தமிழ் மொழியின் வீச்சு, ஆழம், அகலம் என்று அப்போது தான் எனது வாழ்வில் அறிமுகம் ஆனது. இரண்டு வருடங்களும் கற்ற அந்த தமிழ்மொழி இன்று வரையிலும் ஏதோவொரு வகையில் உதவிக் கொண்டேயிருக்கின்றது.  திரைப்படங்களுக்கு பாடல் எழுத முயற்சித்தார்.  சில படங்களுக்கு எழுதி விட்டு வந்ததாக அப்போது எங்களிடம் சொன்னார்.  மணிமேகலை காப்பியத்தின் தொடர்ச்சியாக மற்றொரு காப்பியத்தை உருவாக்கினார்.  பல இடங்களுக்கு ஆய்வுக்குச் சென்றது.

தினந்தோறும் காரைக்குடியிலிருந்து தான் எங்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் காலமாற்றத்தில் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் ஓய்வு பெற்று தற்போது ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


இரண்டு முறை சந்திக்க முயற்சித்து தோற்றுப் போனேன். அவரிடம் படித்த பழைய மாணவர்களுக்கே அவர் குறித்த நினைவில்லை. 

உள்ளூரில் இருப்பவர்களுக்கே அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை என்ற போது தான் தமிழ் என்பது வெறுமனே படிக்கும் போது மதிப்பெண் வாங்க மட்டுமே என்ற எதார்த்தம் எனக்குள் உரைத்தது.


ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்

3 கருத்துரைகள்:

தொழிற்களம் குழு on 11/09/2012 said...

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.எங்களுக்கும் அந்த நாள் பள்ளி ஞாபகம் வருகிறது

முனைவர்.இரா.குணசீலன் on 12/14/2012 said...

காரைக்குடி பகுதியில் உள்ள அத்தனை வீடுகளிலும் ஒரு கலைநயம் கலந்தே இருக்கும். பாரம்பரியம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தினாலும் கட்டிடக்கலை என்பது வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது என்பதாக இருக்கும்

காரைக்குடியில் பத்து ஆண்டுகள் கல்விபயின்றவன் என்ற முறையில் தாங்கள் கூறும் கருத்தை முழுமையாக உணர்கிறேன்.

முனைவர்.இரா.குணசீலன் on 12/14/2012 said...

தங்கள் அனுபவமும் தமிழ்மொழிகுறித்த தேடலும் அருமையாக உள்ளது தொடர்க.

 

மேலே செல்