என் பள்ளிக்கூட வாழ்க்கையில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருந்தாலும் எனக்கு தமிழாசிரியாக இருந்து கோ. அங்கமுத்து என்ற ஆசிரியரை நினைத்துப் பார்க்கும் போது தற்போது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்க நியதிகளும் என் நினைவுக்கு வந்து போகின்றது.
அதற்கு முழுமுதற் காரணமே என் இரண்டு தமிழாசிரியர்கள் தான் .
நான் திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன். எங்கள் தமிழாசிரியர்களின் பாணியே அலாதியானது. அதாவது கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
"கண் பார்வையில் பார்த்து திருந்தாதவர்கள் கட்டையில் போகிறவரைக்கும் திருந்தமாட்டார்கள் என்பார்கள்."
எனக்கு பாடம் சொல்லித்தந்த ஒரு தமிழாசிரியரின் பாணியும் அப்படித்தான் இருந்தது.
பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக வந்தாலோ, அல்லது சொல்லாமல் விடுமுறை எடுத்தாலோ என்ன நடக்கும் தெரியுமா? இப்படித்தான் வெளியே நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வியாக கேட்பார்.
எங்கடா போன ? மாமியா வீட்டுக்கு தண்ணி சேந்த போனியா? அப்புறம் ஏண்டா லேட்டு ?
எங்கடா போன ? மாமியா வீட்டுக்கு மாவரைக்கப் போனியா ? அப்புறம் ஏண்டா லீவு ?
கேட்பது மட்டுமல்ல..கையில் வேப்பக்குச்சியை அதன் பட்டைகளை உரித்துக்கொண்டே கேள்வி கேட்பார். வேறு வழியில்லை. கையை இழுக்காமல் நீட்டினால் ஒரே அடிதான். கையை இழுத்தால் அருகே இழுத்து காது பிடித்து பிசைந்து கொண்டே ஆட்டினால் ஓரிரு நிமிடங்கள் நீடிக்கும்.
பள்ளிப்பருவத்தில் குடும்பம், வாழ்க்கை, ஆண், பெண் உறவு குறிப்பாக திருமண வாழ்க்கை போன்ற எந்த விசயத்திற்குப் பின்னால் உள்ள முழுமையான விபரங்கள் தெரியாது. ஆனால் எங்கள் தமிழாசிரியர் சங்க கால இலக்கியத்தில், தலைவன் தலைவி வாழ்க்கை மற்றும் அவர்களின் ஊடல் வரை பல்வேறு பாடங்களின் பாடல்களின் மூலம் புரிய வைக்கும் போது எனக்கு மட்டுமல்ல வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களின் முகமும் வெட்கத்தில் சிவக்கும்.
மாமியார் என்கிற உறவினர் எப்படி இருப்பார் என்ற எந்த கற்பனைகளும் இல்லாது வெறுமையாய் இருந்த வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது இந்த வார்த்தைகளைக்கேட்டாலே சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். தமிழ் வகுப்பு வந்து விட்டாலே நான் வெளியே எங்கும் செல்லமாட்டேன். மற்ற பாடங்களின் வகுப்புகள் தொடங்கும் போது 5 நிமிடம் வெளியே ஓடிச் சென்று விட்டுத் தான் பிறகு உள்ளே வருவேன். .
அங்கமுத்து என்கிற எங்கள் தமிழ் ஆசிரியரை பெரிய தமிழாசிரியர் என்ற பட்டப்பெயருடன் அழைப்போம்.
திருப்பூர் அங்கேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணி புரிந்த இவரிடம் படித்ததில் நான் பெருமை கொள்ள வேண்டிய அம்சம் இன்றளவில் தமிழில் எழுதுவதில் ல,ள,ழ கரங்களில் தவறு ஏற்படுவதே இல்லை.:) அந்த அளவிற்கு தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிகிற மாதிரி நடத்துவதில் சமர்த்தர். பார்க்க மீசை இல்லாத கவுண்டமணி முழுக்கை சட்டையுடன் வந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்.
இவர் இப்படி இருக்க குருசாமி என்கிற சின்ன தமிழாசிரியரின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கும். ஒருவரையும் கடிந்து பேச மாட்டார். தவறு செய்தால் உற்றுப் பார்ப்பார். அவ்வளவுதான். அந்தப் பார்வையில் கோபம் இருக்காது. நான் உன்னை கவனிக்கிறேன் என்ற செய்தி மட்டும்தான் இருக்கும். அடித்துத் திருத்துவது ஒரு ரகம் என்றால் நம்மை உணர வைத்து திருத்துவது ஒரு ரகம்.
இவர் இரண்டாம் ரகம்.
ஆனால் இன்று வாழ்வில் பல படிகள் ஏறி இறங்கி இப்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுடன் வாழும் என் வாழ்க்கையில் யோசித்துப் பார்க்கும் போது எங்கள் சின்ன தமிழாசிரியர் அணுகுமுறை தான் முதல் தரமாக இருக்கின்றது.
சற்று உயரம் குறைவாக இருந்தாலும் வகுப்பிற்கு வந்தால் பாடப்புத்தகத்தை பார்த்து பாடம் நடத்த மாட்டார். எந்த பகுதி எனப் பார்த்துவிட்டு ஆரம்பித்தால் அந்தப்படம் திரைப்படம் போல் கண்முன்னே காட்சிப்படுத்துவார். குற்றாலக்குறவஞ்சியில் வரும்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித்திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே!
பாடல் பாடி வரிக்கு வரி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் கவனம் வெளியே போகவே போகாது. மனம் பெட்டிப் பாம்பாய் கவனித்துக் கொண்டு தான் இருக்கும். .
வரிக்கு வரி பாடம் நடத்துவது என்றால் வெறுமனே விளக்குவதல்ல.. அற்புதமான முகபாவங்களுடன் கண்கள் அரைவாசி மூடியவாறு ராகத்துடன் பாடிக் காண்பிப்பார்.
அந்த வரிகளின் அர்த்தங்களை நம் மனக்கண் முன் அப்படியே காட்சிகளாக கொண்டு வந்து நிறுத்துவார். தான் வாங்கும் சம்பளத்திற்காக வேலை செய்யாமல் தன் ஆசிரியர் பணியை ஒரு தவமாக சலிப்பின்றி தொடர்ந்து செய்த இந்த குருசாமி ஆசிரியர் போன்றவர்களால்தான் இன்றளவில் என்னால் ஒரு விசய்த்தை முழு மனதோடு கவனமாக செய்ய முடிகின்றது
.
இந்த பழக்கம் என்பது இவரிடமிருந்து தான் எனக்குத் தொடங்கியது.
இன்று வரையிலும் தொடர்கின்றது. தற்போது எனது வாழ்க்கை முறை மாறியுள்ளது. வசதிகள் கூடியுள்ளது. நான் நினைக்கும் எண்ணங்களை உலகளவில் கொண்டு போய் சேர்க்க முடிகின்றது. ஆனால் இவை அத்தனைக்கும் எனக்கு அஸ்திவாரம் இட்டது எனது தமிழாசிரியர்களே.
எனது பள்ளி நாட்களை, நினைவுகளை மீட்டெடுத்த தமிழ்ச்செடிக்கு என் நன்றி.
நிகழ்காலத்தில் சிவா...
3 கருத்துரைகள்:
அன்பின் சிவா - மலரும் நினைவுகள் - இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு - அக்கால ஆசிரியர்களைப் பற்றிய அருமையான் பதிவு. மிக மிக இரசித்தேன் சிவா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தமிழாசிரியர்களைப் பற்றிய பார்வையில் ஒருவர் அடித்துக் கண்டிக்கின்றார்..!ஒருவர் அடிக்காமல் கண்டிக்கிறார் பார்வையின் மூலம். அடிப்பதை விட இது தரமானது என்பதை விட மனசு வலிக்கக்கூடியது ஆழ்மனதை உறுத்தக் கூடியது என்பது உண்மை..!
தமிழ் நமக்கு ஒழுக்கத்தையும் ஒருங்கே தருகிறது என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்.
Post a Comment