மலைச் சாரலைப் போல், அமைதியான அலைகடலைப் போல், ஆர்ப்பாட்டமில்லாத, ஆரவாரமில்லாத, அமைதியான, தென்றலைப் போல் மயிலிறகில் நம்மை வருடும் விதமான எழுத்தைப் படைப்பதில் மலையாள இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்.
நாம் பிரமிக்கும் தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர். மற்றும் எழுத்தாளர்களின் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் தமிழில் பஷீருடன் ஒப்பிட்டுப் பேச நம் மொழியில் எவரும் இல்லை. அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிசச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். என்கின்றார்.
1908ம் வருடம் கேரளாவில் வைக்கம் தாலுக்காவில் தலயோலப் பிரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராகச் சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழான உஜ்ஜீவனம் எனும் வார இதழையும் துவக்கினார்.
பத்தாண்டுகள் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலக்கட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஜந்தாறு வருடங்கள் இமயமலைச்சாரலிலும்,கங்கை கரையிலும் இந்து துறவியாகவும், இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய அரசுகளின் ஓய்வூதியம், ஃபெல்லோஷிப், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர். 1994ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி காலமானார்.
இவருடைய நாவலான “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது” என்கின்ற நாவலை மார்க்கிசிய கருத்தியலுக்கு எதிரான பிற்போக்கு நாவலென்று கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. எதிர்த்தவர்களில் முக்கியமானவர் அன்றைய கேரள நிதிமந்திரியாக இருந்த அச்சுமோனோன் என்பவர்.
ஆனால் அந்த நாவல் மத்திய சாகித்ய அகாதாமியால் தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
பிறகு சில வருடங்களுக்கு பிறகு கேரள சட்டமன்றத்தை கம்யூனிஸ்ட் கைப்பற்றியது அப்பொழுது துணைப்பாடநூலில் “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது” நாவலையும் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரத்தில் ஒரு முசல்மானின் புத்தகத்தை நான்டீட்டெய்லாக ஏற்றுக் கொண்டதை கேரள இலக்கிய வாசக உலகம் அதிசய நிகழ்வு என்று கூறுகின்றார்கள்.
முதலில் கடுமையாக எதிர்த்த அச்சுமோனனும் பஷீரின் நாவலை நான்டீடெயிலாக தேர்வு செய்த கமிட்டியில் இருந்தார் என்பதும் ஒரு அதிசயம் என்கின்றார்கள்.
1954ம் வருடம் பாத்துமாவின் ஆடு நாவலை எழுதியவர் ஜந்து வருடங்களுக்கு பிறகுதான் வெளியிட்டேன் என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இந்த கதை எழுதிய பொழுதுகளில் தூங்காமல் இரவு, பகல் என கடுமையான பணியினால் மனஅழுத்தம் ஏற்ப்பட்டு சிகிச்சை பெற்ற பொழுது எழுதியது என்கின்றார்.
பஷீர் அவர்கள் நெடுங்காலமாக நாடோடியாக அலைந்து திரிந்து ஒரு ஏகாந்த வாழ்க்கைக்கு பிறகு மூக்கு நுனி கோபத்துடன் தலயப்பிரம்பில் அவர் வீட்டுக்கு திருப்பி வருகின்றார். அவர் தனியாக எழுதுவற்கும் சிந்திப்பதற்குமாக வீட்டுக்கு எதிரே ஒரு சிறிய ஓட்டு வீடு! அது ஒரு அழகான வீடு என விளிக்கின்றார், அதை கட்டிடமாக கட்டுவதற்கு கல்லும் மண்ணும் சுமந்தேன் என்கின்றார்.
அழகுக்காக சில வேலைப்பாடுகள் செய்திருக்கின்றேன் உயரமாகக் கல்கட்டி, வெள்ளை மணல் தூவிய முற்றத்தைச் சுற்றிலும் அழகழகான செடிகள் இருந்தன. மலர்ப்பந்தலில் முல்லையும், பிச்சிபூவும் படர்ந்திருந்தன, முற்றத்தின் ஓரங்களில் கொய்யா மரங்கள் வளர்ந்துகொண்டிருந்தன. குடிப்பதற்கும், குளிப்பதற்குமென அங்கே இரண்டு குளங்கள் இருந்தன, தோட்டம் நிறைய தென்னையும் வாழையும் மற்றும் பல வகையான விருட்சங்களையும் நட்டு இருக்கின்றேன்.இதில் மாமரமும் உண்டு என்கின்றார்.
கற்பனையில் நாம் நினைக்கும் பொழுது எவ்வளவு அழகான வீடு! கிராமத்து வீடுகள் என்றாலே மிக அழகு, தூய்மையான காற்று, சுற்றிலும் மரங்கள் என அவர் குறிப்பிடுகையில் நம் முகத்தில் குளிர் காற்று வீசுகின்றது அவரின் வர்ணணையில்.
ஆனால் அவர் ஏகாந்த வாழ்க்கையில் இருந்த போது அந்த அழகான வீட்டை ஒரு அதிகாரிக்கு வாடகைக்கு விட்டுவிடுகின்றார்கள் அவரின் சகோதரர்கள். அதனால் எப்பொழுதும் தனிமையில் இருக்கும் பஷீர் தன் சகோதரிகள், சகோதரர்கள் அவர்களின் நிறையக் குழந்தைகள் அவருடைய “உம்மா” என்று எப்பொழுதும் சந்தைக்கடை போலிருக்கும் ஓலைக் கூரை வேய்ந்த வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை.
இதில் தன் சகோதரி பாத்துமாவின் ஆடு ஒரு கதாபாத்திரமாக அந்த வீட்டில் சுதந்திரமாக உலாவுகின்றது. அவருடைய ஒரு நாவல் புத்தகத்தை தின்றும் விடுகின்றது. அது மட்டுமில்லாமல் குழந்தையின் அரைநிஜாரின் பையில் வைத்திருந்த ஆப்பத்தை சுவைக்க நிஜாரை தின்கின்றது. பையிலிருந்த சில சில்லரைக் காசுகளையும் சேர்ந்து விழுங்கி விடுகின்றது. ஆட்டின் மலத்தில் காசு வருமா...? என்று அன்றைய நாள் முழுவதும் அதன் மலத்தை சோதித்து பார்த்தேன் காசு வரவில்லை என்று சிரிக்கின்றார்.
பள்ளிக்கு போகும் சில பெண்கள் குறிப்பாக “சுருட்டை முடிக்காரி” ஒருத்தி தான் ஒரு எழுத்தாளர் எனவும் தன் எழுத்துகளால் கவர்ந்து தன்னைப் பார்த்து செல்கின்றாள் என நினைத்து பெருமிதம் கொள்கின்றார்...!
ஒரு நாள் அவரை நோக்கி வருகின்றார்கள் அந்தப் பெண்கள். ஆட்டோகிராப் போட பேனாவை எடுத்து தயாராக வைத்துக் கொள்கின்றார் ஆனால் அந்த பெண்களோ சாம்பக்காய் (புளியம்பழம்) கேட்கின்றார்கள்...அவர்கள் நாவில் எச்சில் ஊற பார்த்தது தனக்கு பின்னால் இருந்த சாம்ப மரத்தில் தொங்கும் சாம்பக்காய்களை என்று தெரிந்து, கோபத்தில் சாம்பக்காய்களை விலைக்கு விற்கின்றார் அதுவும் சிறிய பழங்களாக தருகின்றார். அவர்கள் பெரிய பழங்களாக கேட்கின்றார்கள் தர மறுக்கின்றார். அதே நேரத்தில் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்த கறுப்பான ஒரு பெண்ணுக்கு கேட்காமல் பெரிய பெரிய சாம்பக் காய்களாக பறித்து நிறைய தருகின்றார்.
அடிக்கடி சாயா குடிக்கின்றார், பீடி பற்ற வைத்துக் கொள்கின்றார் குழந்தைகளுக்கு நேந்திரன்பழம், சக்கபழம்(பலா), புர்த்திசக்க(அன்னாசிபழம்) வெட்டி தருகின்றார். வீட்டு செலவுக்கு என்று பணம் தருகின்றார், சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிக்க தர மறுக்கின்றார், என சுவாரஸ்யமான சின்ன சின்ன சம்பவங்களை பிசகில்லாமல் விவரிக்கின்றார்.
பாத்துமாவின் ஆடு கர்ப்பமாகின்றது அதன் பிரசவத்தை எல்லாரும் எளிதாக எடுத்துக் கொள்ள பஷீர் மிகுந்த பரபரப்புடன் இருக்கின்றார். அது அழகான ஒரு குட்டியை ஈன்றெடுக்க அதை கொஞ்சுகின்றார், ஆட்டுப் பாலை விற்று தன் குடும்ப செலவுகளை சாமாளிக்கலாம் என்று பாத்துமா இருக்க, வீட்டாட்கள் ஆட்டுப் பாலை திருடிக் குடிக்கின்றார்கள், பாத்துமா இவரிடம் முறையிட இவர் சமரசம் செய்து அவளே வீட்டாட்களுக்கு தினமும் பால் தருகின்றாள் என கதையை முடிக்கின்றார், ஆனாலும் படித்து முடித்து சில வருடங்களாகியும் நம் மனதை விட்டு அகலாதிருப்பது பாத்துமாவின் ஆடுவும்! மற்றும் அலட்டி திரிந்த பஷீர் தாத்தாவின் அலட்டலான எழுத்துகளும்.
பாத்துமாவின் ஆடு நாவலைச் செம்மையாக மொழி பெயர்த்த குளச்சல் மு. யூசுப் அவர்கள் சில வார்த்தைகளை மலையாள மொழியில் உள்ளதை அப்படியே தருகின்றார் . அதற்கான விளக்கத்தை கீழே கொடுத்திருக்கின்றார். சில மொழி பெயர்ப்பு நூல்களில் பார்த்தால் சில வார்த்தைகளை அப்படியே தமிழில் மொழி பெயர்க்கின்றார்கள் அது அந்த எழுத்தாளர்களின் தன்மையை, கற்பனையை சிதைத்து விடுகின்றது அப்படிச் செய்யாமல் இப்படித் தந்தமைக்காக யூசுப் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
---------------------------------------
பதிப்பகம் : காலச்சுவடு,
விலை : 90.00
---------------------------------------
பதிப்பகம் : காலச்சுவடு,
விலை : 90.00
---------------------------------------
0 கருத்துரைகள்:
Post a Comment