சதுரமான மூக்குக் கண்ணாடி, சுருட்டை முடி, நல்ல சிகப்பு நிறம், வாயில் எப்பொழுதும் மெல்லும் சீவல், வெற்றிலை, துப்பைப்பூ மாதிரிச் சட்டை, வேட்டி, சன்னலில் வெற்றிலையை துப்பி விட்டு கையில் புத்தகமும் இருக்காது நேற்று நடத்தியது என்னவென்று தன் கூர்மையான ஞாபக சக்தியால் உணர்ந்து ஒரு மணி நேரம் மாணவர்களை மகுடிக்கு மயங்கிய சர்ப்பங்களாய் ஆக்கிவிடும் வல்லமைப் படைத்த தமிழாசிரியர் ஐயாச் சு.கிருட்டிணராசு.
எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழாசிரியர்கள்தான் நம் உணர்வைத் தொடுபவர்கள்,
நம்முடைய முதல் சிந்தனையை முனை நசுக்கித் திரிக் கொளுத்தி நம்மிடமுள்ள இலக்கியச் சிந்தனை, புனைவுத்திறன், ஆகியவற்றை குன்றிலிட்ட விளக்காய் வெளிக் கொணர்வது தமிழ்ப் பாடம்தான். வரலாறு நடந்த கதைச் சொல்வது, அறிவியல் கண்டுபிடிப்பைச் சொல்வது, கணக்கு தொழில் முறையைச் சொல்வது, ஆங்கிலம் பிற மொழியறிவைத் தருவது. பெரும்பாலான தமிழ் வழியில் கசப்பைத் தருவது, ஆனால் தமிழ் மட்டுமே உணர்வைத் தருவது இது நமக்கு மட்டுமல்ல அனைத்து மொழியினருக்கும்தான்.
என்னதான் பிற மொழியில் தேர்ச்சிப் பெற்றாலும்,
ஆந்தை மயில் போல் அகவும் முடியாது! குயில் போல் மயில் பாடவும் முடியாது! கவிதை, கட்டுரை, கதைகள் நம் தாய்மொழியில் எழுதுவது போல் வேற்று மொழியில் எழுதினால் உணர்வைத் தொடுமா என்பது ஜயமே!
தாய்ப்பாலைக் கடமைக்காக புட்டியில் புகட்டாமல் முலைப்பால் புகட்டும் தாய் போல் தான் தமிழாசிரியர்களும்,
எனக்கு ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை சு.கி அவர்கள்தான் எனக்கு தமிழாசிரியர், அவர் திருக்குறள் பாடம் எடுக்கும் போது குறளுக்கு ஒரு கதைச் சொல்வார் அந்தக்கதை அனேகமாக ஹாஸ்யக் கதைகளாக இருக்கும் சும்மா கிடையாது வயிற்று வலியில் துடிக்க வைத்து விடுவார். வெறும் பாடப்புத்தகத்தில் உள்ளது மட்டுமில்லாது பல கதைகளைப் படித்து மாணவர்களுக்காக தானும் ஒரு மாணவனாக தேடல் உள்ளவர்களே சிறந்த ஆசிரியர்கள். அந்த வகையில் அவர் சிறந்த ஆசிரியர் என்பதை நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இலக்கிய புத்தகங்களே சாட்சி! ஓய்வு நேரத்தில் அவர் படித்துக் கொண்டிருக்கும் பல புத்தகங்களை நான் இரவல் வாங்கிச் சென்று படிப்பதுன்டு. பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒரு சக நண்பனைப் போல...! சிலதைப் சிலாகித்துப் படிக்கச் சொல்வார்.
கதைச் சொல்லும் பொழுது அதன் காதாபாத்திரங்களைப் போல் நடிப்பார் ஒரு நாடகமே அங்கே நடக்கும், குழந்தைப் போல் பேசுவார் முதியவர் போல் பேசுவார், அடிப்பது மிரட்டுவது எதுவுமே இருக்காது அவரிடத்தில் இளம் வயதில் பசுமரத்து ஆணி போல் நம் மனதில் பதியவைக்கும் வித்தையறிந்தவர்.
இது போன்ற ஆசிரியர்களை இப்பொழுது பார்ப்பது மிகவும் அரிது இன்னமும் சில நேரங்களில் மகனுடைய பள்ளிக்குச் செல்லும் பொழுது, வகுப்பறையை ஏக்கத்துடன் பார்த்து நாம் மீண்டும் பாலகனாக மாறிச் சு.கி அவர்களின் வகுப்பறையில் அமர்ந்து இருக்க மாட்டோமா....! என் ஏங்க வைத்தவர் ஜய்யாச் சு.கி.அவர்கள். சாட்டை திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் பாத்திரம் ஒரு மிகைபடுத்தப்பட்ட சினிமா என்றாலும் அவரைப் போன்ற ஆசிரியர்களுக்காக ஏங்கும் உள்ளங்கள் நிறைய இருக்கின்றன என்பது உண்மைதான்....!
தமிழ்ச் செடிக்காக.....
வீடு சுரேஸ்குமார்
5 கருத்துரைகள்:
நாம் எல்லோரும் இவர் போன்ற தமிழ் ஆசிரியர்களை கடந்துதான் வந்திருக்கிறோம். இந்தப் பதிவு, எனக்கு என் பள்ளி/கல்லூரி தமிழாசிரியர்ளின் நினைவுகளை மீட்டுகிறது.
நல்லதொரு ஆசிரியரை அறிய வைத்தமைக்கு நன்றி.
படிக்கும்போதுதான் தடுமாறி படிச்சோம்.......
இப்ப மீண்டும் நினைவு படுத்துதலா????????
9,10,11,ஆவதுதமிழ்பாடம்ஊட்டியஎனதுதமிழ்ஆசிரியர்y.s.kஅவர்கள்நினைக்கிறேன்
Post a Comment