11/5/12

மோகமுள்-தி.ஜானகிராமன்



 
மோகமுள்
மோகமுள்
தி. ஜானகிராமன்
 வெளியீடு:  ஐந்திணை பதிப்பகம்,  பக்கம்: 688,  விலை: ரூ. 300/-
Dial For Books:  94459 01234, 9445 97 97 97
....என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.... - .....இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது.
மோகமுள் பிறந்த கதை பற்றி தி.ஜா. (நன்றி: சொல்வனம்)
 மோகமுள் நாவல் பற்றி சுசிலா ராமசுப்ரமணியன் அவர்களின் விமர்சனம்:
மோகமுள் - இந்த வித்யாசமான தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. கதையின் நாயகன் பாபு. சற்றே மரபு மீறிய காதலாய் தன்னைவிட மூத்தவளான யமுனாவின் மீது அவன் கொள்ளும் மோகம்; அந்த மோகம் இசையுலகின் உயர்ந்த இடத்தை அவன் அடையும் லட்சியத்திற்கும் அவனுக்கும் இடையில் நின்று நிரடும் நிரடல், இவர்களைச் சுற்றி பலப்பல கதாபாத்திரங்கள் என்று சுமார் 700 பக்கப் புதினம். முன்னூறு அல்லது ஐநூறு வார்த்தைகளில் இந்தப் புத்தகத்திற்கு அறிமுகமோ அல்லது விமர்சனமோ எழுதித் தள்ளுதல் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.
பாபநாசத்தைச் சேர்ந்தவன் நம் நாயகன் பாபு. சங்கீதத்தில் அதீத ஆர்வம் கொண்டவன். அவனைக் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று அந்த ஆர்வத்தை வளர்க்கும் அப்பா. பாபுவின் சகோதரியின் தோழியான கதையின் நாயகி யமுனா, பாபுவுக்கு உயிர் நண்பனாக ராஜம்.
வயதான மனிதர் ஒருத்தரை மணந்த பக்கத்து வீட்டு இளம்பெண் ஒருத்தி, அவள் மீதான ஈர்ப்பு, அவள் மரணம், யமுனாவின் தந்தையின் மரணம், இந்த நிகழ்வுகள் சார்ந்த பாபுவின் மன உளைச்சல்கள், தடுமாற்றம் என்று கதை பயணிக்கிறது. பாபுவின் சங்கீத ஞானம் குடத்திலிட்ட விளக்கு ஆகிவிடக்கூடாது என்று ரங்கண்ணாவிடம் இசை பயில சேர்த்துவிடுகிறான் ராஜம். அதன்பின் பாபு மேல்படிப்பிற்கு சென்னை வருவது, யமுனா மீதான ஈர்ப்பு, அவன் சங்கீதத்தில் அடுத்த அடுத்த படிகளை எடுப்பது, அதற்கு வரும் சங்கடங்கள், சாதனைகள் என்றெல்லாம் பயணிக்கிறது கதை. அவன் நெஞ்சை நெருடிக் கொண்டிருந்த முள் என்னவானது, அவன் சங்கீத உலகில் என்னவாகிறான் என்பதே கதையின் முடிவு.
தஞ்சை பாஷையை தி.ஜா.வை விட்டால் யார் இத்தனை அருமையாய் எழுத்தில் கையாள்வார்? கதை படிக்கையில் நாம் கும்பகோணத்திலேயே வாசம் செய்கிறார்போல் ஓர் உணர்வு. கும்பகோணம் வீடும், அதன் முன்னே ஓடும் காவிரியாறும், அதன் சிலுசிலுப்பும், அதில் குளிக்கும் அனுபவமும்  பாபுவுக்கு மாத்திரமல்ல, ஏதோ நாமே காவிரியில் முங்கிக் குளித்த சந்தோஷம் ஏற்படுகிறது நமக்கு.
நாவலின் அடிநாதமே சங்கீதம்தான். நம் நாயகனின் மூச்சுக்காற்றாகவும் அதுவே இருப்பதால் ரங்கண்ணாவின் சங்கீதமும், பூனாவிலிருந்து வரும் பாடகர்களின் சங்கீதமும் என பாபு மாத்திரமல்ல அவனுடன் சேர்ந்து நாமும் சங்கீதத்தில் திளைக்க ஏதுவாய் இருக்கிறது, திஜா’வின் எழுத்து வாயிலாக.
சங்கீதத்தைச் செவியின் துணை கொண்டுதான் ரசிக்கவேணும். எழுத்தில் செய்யும் விவரணைகள் வெறும் எழுத்துக்களேயன்றி ஒலியல்லவே? ஆனால், தி.ஜா.வின் எழுத்துக்களில் இசை குறித்து வாசிக்கையில் நாம் ஏதோ அந்த இசையிலேயே  திளைத்து மகிழ்வதாய்த் தோன்றுகிறது. அதுதான் அவர் எழுத்தின் சிறப்போ?
கதாபாத்திரங்கள் வேடங்களைத் தாங்கிக் கொண்டு அதீத குணாதிசயங்களையெல்லாம் கொள்ளாமல் அவரவர்களாகவே இயல்பாய் வளைய வருகிறார்கள் என்பது மோகமுள்ளின் சிறப்பு.
பொதுவாக நாவல்களில் / சினிமாக்களில் - “இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவது அல்ல - என்று குறிப்பிடுவார்கள். ஆனால், மோகமுள் படிக்கையில் அந்தக் கதாபாத்திரங்களுடனும், சங்கீதத்திலும் திளைத்துக் காவிரியில் குளித்து அவர்கள் சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டதைப் போன்றே தோன்றுகிறது என்றால் அது நிச்சயம் மிகையில்லை. அதுவே இந்தப் புத்தகத்தை மறுபடி மறுபடி பலமுறைகள் என்னைப் படிக்க வைக்கும் காரணமாகவும் இருக்கிறது.
நன்றி: OMNIBUS
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-394-3.html
போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97

0 கருத்துரைகள்:

 

மேலே செல்